செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2019

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரே தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோரி, ஒரு பக்கச் சார்பாக நீதிமன்றத்தை நாடிச் செல்கின்ற நிலையில், இங்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் எமது மக்கள் எந்த நம்பிக்கையினை கொள்ள முடியும்? என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளடங்கலாக 22 நிறுவனங்கள் தொடர்பிலான 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் மதிப்பீட்டின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

துறை சார்ந்து மிகத் திறமையாக செயற்படுகின்ற ஒரு நடுத்தர வயதுடைய ஓர் அதிகாரியை இத்தகைய ஆணைக்குழுக்களில் தேடிக் கொள்வதே இன்று சிரமமான காரியமாக இருக்கின்றது.

அண்மையில்கூட 80 வயதினைத் தாண்டிய நிலையில் – அதாவது 80, 83, 85, 87 வயதுகளில் சில ஆணைக்குழுக்களுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தாமதமாவதாக முறைப்பாடுகள் எழுப்பப்பட்டிருந்தன.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவானது அது ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக செயற்பாடின்றிய நிலையில் இருந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கடந்த வருட இறுதியில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதுவரையில் ஒரு பட்டதாரியோ, கணக்காளரோ, நிபுணத்துவம் பெற்ற கணக்கு பரிசோதகரோ, பொறியியலாளரோ அதன் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

ஆக, 25 வருடங்களாக அந்த ஆணைக்குழுவுக்கென மக்களின் நிதி வீண் விரயமாக்கப்பட்டுள்ளது என்றே தெரிய வருகின்றது.

எனவே, இந்த நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இத்தகைய வீண் விரயங்களுக்காக மக்களது நிதியினை செலவு செய்யாமல், செலவு செய்யப்படுகின்ற நிதிக்கேற்ப பயன்களை எமது மக்கள் பெறத்தக்கக்கூடிய வகையிலான ஏற்பாடுகள் அவசியம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: