செயலூக்க வல்லமை சிவஞானசோதியின் மறைவு பெருந்துயரை தந்துவிட்ட பேரிழப்பு – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 7th, 2021

அரும்பெரும் செயலூக்கச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருந்த வல்லமையாளன் ஒருவரை தமிழர் பிரதேசங்கள் மட்டுமன்றி, இலங்கைத்தீவே இன்று இழந்து விட்டது என ஈழ மக்கள் ஜனநாகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

மறைந்த வே.சிவஞானசோதி குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அனுதாபச் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவது –

இலங்கைத்தீவின் அரச திட்டமிடல் சேவையின் நீண்ட கால  வினைத்திறன் மிக்க செயற்பாட்டு அதிகாரி இவர் பல்வேறு அமைச்சுகளின் செயலாளராக மட்டுமன்றி பல்வேறு பொறுப்புக்களையேற்று இடையறாது மக்கள் பணியாற்றி வந்தவர், இதுவரை நான் பொறுப்பேற்று மக்கள் பணியாற்றி வந்த அமைச்சுகள் சிலதின் செயலாளராக மட்டுமன்றி,..ஏனைய அமைச்சுகளின் செயலாளராகவும் அவர் பதவி வகித்த போதும். எமது மக்களுக்காக நான் ஆற்றி வந்த எனது இடையறாத பணிகளோடு தன்னையும் இணைத்துக்கொண்டவர்.

எமது மக்களை மீளக்குடியேற்றி, வாழ்வாதார மற்றும் அடிப்படை வாழ்வியல் உரிமைகளை முடிந்தளவு நான் வழங்கிய போதும் சரி, இந்து கலாச்சார அமைச்சராக இருந்து நான் மதங்களை கடந்து சகல மக்களுக்கும் ஆன்மீக ஈடேற்ற பணிகள் புரிந்த போதும் சரி, எமது மக்களுக்கான எனது பணிகளில் முன்னின்று உழைத்தவர் வே.சிவஞானசோதி.

அமைச்சரவையில் பேசி தீர்மானிக்கப்பட்டால் மட்டுமே அதை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்த முடியும் என்ற நிலை இன்று வரை நீடித்து வரும் நிலையில் நான் எமது மக்களுக்கு ஆற்றிய பல்வேறு அமைச்சு பணிகளுக்கான அமைச்சரவை பத்திரங்களை எமது கட்சியின் ஆலோசகருடன் இணைந்து தயாரிப்பதில் தனது ஆலோசனைகளையும் வழங்கியவர்.

அதிகாரங்களில் அமர்ந்திருப்பது வெறுமனே அந்தஸ்திற்காக அன்றி அந்த அதிகாரங்கள் அவலப்படும் மக்களின் துயர் துடைக்கவே என்ற எமது இலட்சிய வழிமுறையை ஏற்றுக்கொண்டு உழைத்தவர் அமரர் வே.சிவஞானசோதி என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை மத்திய அரசில் பங்கெடுத்து அதன் அதிகாரங்களை தமிழர் பிரதேசங்களிலும் எமது கொள்கை வழி நின்று பகிர்ந்தளிக்க வல்ல தமிழ் அதிகாரிகள் முன்வரவேண்டும். அதுவே, அமரர் சிவஞானசோதி அவர்களின் இடைவெளியை இட்டு நிரப்பி,. அவருக்கு வழங்கும் அஞ்சலி மரியாதையுமாகும் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயலூக்க வல்லமை அமரர் சிவஞானசோதி அவர்களுக்கு எனது ஆழ்மன அஞ்சலி மரியாதையை செலுத்துவதுடன் அவரது இழப்பின் துயரால் வதைபடும் குடும்பத்தவர், உறவினர்கள்,. நண்பர்கள் சகலருக்கும்  அவரை நேசிக்கும் நெஞ்சத்தால் ஆறுதல் கூறுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: