செயற்றிறனற்ற வடக்கு மாகாண சபையால் எமது மக்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, December 9th, 2017

வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினைக்கூட எமது மக்களின் நலன்கள் கருதிய செயற்திட்டங்களுக்கென செலவு செய்யப்படாமல், அந்த நிதியில் கணிசமானளவு திறைசேரிக்கே மீளத் திரும்புகின்ற நிலையே காணப்படுகின்றது. இதை நான் மட்டும் கூறவில்லை. கடந்த வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவரகளும் இந்தச் சபையில் வைத்துக் கூறியிருந்தார். மேலும் பலரும் கூறி வருகின்றார்கள்.

ஒதுக்கப்படுகின்ற நிதியின் பெருமளவு நிதியை வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் செலவு செய்யவேண்டும். அவ்வாறு இல்லையேல், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது தோற்றுவித்துவிடும். குறுகிய காலத்தில் பெரும் தொகை நிதி செலவு செய்யப்படவேண்டிய நிலையினைத் தோற்றுவித்துவிடும். முதல் ஐந்து மாதங்கள் தவிர்ந்த ஏனைய சில மாதங்கள் பருவப் பெயர்ச்சி மழையோடு கடந்துவிட்டால், கால அவகாசமானது குறுகிவிடும். இந்தக் குறுகிய காலத்தில் பெருந் தொகை நிதி செலவு செய்யப்படும் போது, முறைகேடுகளும், திட்டமிடப்படாத செலவீனங்களும் ஏற்படுகின்றன. உண்மையிலேயே மக்களின் பணத்தை விரையம் செய்யும் நடவடிக்கையாகவே இது அமையும். இத்தகைய நிலையும், வடக்கு மாகாண சபையின் கடந்தகால அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிகள் குற்றச்சாட்டுகளுக்கு காரணமாகின என்றும் கருதலாம். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் வருடத்தின் ஏழாவது மாத்தில் 50 வீதமாக நிதி செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வடக்கு மாகாண சபையின் ஒவ்வொரு அமைச்சினதும் வினைத்திறனை தெளிவாக கோடிட்டு காட்டுகின்ற வகையிலேயே அவற்றின் செயற்பாடுகள் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. உரிய காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு நிதியை செலவு செய்யாது வருட இறுதியில் நிதி திரும்பிவிடும். அவ்வாறு மீண்டும் திறைசேரிக்கு நிதி திரும்பினால் அது மக்கள் மத்தியில் தங்களுக்கு எதிரான கருத்தலைகளை ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தினால் முறையற்ற விதத்தில் பொருட்களை கொள்வனவு செய்து நிதியை செலவு செய்வதனை வழக்கமாக்கி கொண்டுள்ள நிலையையும் காணக்கூடியதாகவே இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:


மக்களின் தேவைகளை நிறைவேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்து...
ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் உப அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் - மன்றில் டக்ளஸ் M...
சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற...