செங்கிரிலா ஹோட்டலுக்காக இராணுவத் தலைமையகத்தையே மாற்ற முடியுமானால் எமது மக்களின் காணிகளை விடுவிக்க முடியாதது ஏன்? – டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி!

Wednesday, March 8th, 2017

எமது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லை என ஆளுந்தரப்பினரும், பாதுகாப்பு தொடர்பான உயர் அதிகாரிகளும் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையில், பாதுகாப்புப் படையினர் நிலை கொள்வதற்கு தேவையான அரச தரிசு நிலங்கள் தேவைக்கு அதிகமானளவு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற நிலையில், செங்கிரிலா ஹோட்டலுக்கென இராணுவ தலைமையகத்தையே அகற்றிய இந்த நாட்டுக்கு, இதே நாட்டின் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள மக்களின் காணி, நிலங்களை விடுவிப்பதற்காக உதிரி முகாம்களை அகற்ற முடியாதா. இக்கேள்வி தற்போது தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, சிங்கள சகோதர மக்களிடத்தேயும் ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும்போது, எமது நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுடன், எதிர்கால சந்ததியினர் அவர்களது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்குத் தேவையான வாய்ப்புகளை பாதுகாத்து அவர்களுக்கு அளிப்பதே நிலைபெறுதகு அபிவிருத்தி எனப்படுகின்றது. எந்தவொரு கட்டமைப்பினதும் செயற்பாடானது அந்தந்த கட்டமைப்பு உருவாக்கத்தின் உதிரி அங்கங்களின் உள்ளார்ந்த செயற்பாடுகளின் மூலமாகவே செயலூக்கம் பெறுகின்றது. அந்த வகையில் எடுத்துக் கொண்டால் மக்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் இயற்கையின் எல்லையினை மீறிய வகையில் சூழலின் அங்கங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்  என்றே தெரிய வருகிறது.

இதன் காரணமாக சூழலின் அங்கங்களான பௌதீக வளங்கள் உள்ளிட்ட காரணிகளின் செயற்பாட்டுத் தன்மைகள் பலஹீனமடைந்துள்ளதாகவும், இவ்வாறான பலஹீனங்களில் சில மீள் உருவாக்கஞ் செய்ய இயலாத அளவுக்கு பாரிய அளவில் சேதங்களுக்கு ஆட்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், இயற்கை மற்றும் சூழலின் முன்பாகத் தோற்றுப் போகின்ற பொருளாதார அபிவிருத்தியானது நிலைபெறுதகு அபிவிருத்தியாக அமையாது. ஆக, எமது நாட்டில் நிலைபெறுதகு அபிவிருத்தி நிலையைப் பேணி முன்னெடுப்பது தொடர்பில் தடையாக இருக்கக்கூடிய காரணிகள் இனங்காணப்பட்டு, அவை அகற்றப்படும் நிலையிலேயே நிலைபெறுதகு அபிவிருத்தி சாத்தியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளில் பலவற்றை நோக்குகின்றபோது, சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான சமநிலைத் தன்மை அபிவிருத்தி அடையாமல், பாரியளவில் அது பின்னடைவு கண்டிருக்கும்  நிலையையே காணக்கூடியதாக உள்ளது.

சூழலின் மாசடைவுக்கும், மிகைப் பாவனைக்கும் காரணம் யாதென அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு காரணம் மனித தீர்மானங்கள் எனில், அந்தத் தீர்மானங்களை நிலைபெறுதகு தீர்மானங்களாக மாற்றிக் கொள்வதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த செழிப்பான, வளமிக்க எமது மக்களது சொந்தக் காணி, நிலங்கள் அந்த மக்களது உயிர்நாடியான வாழ்வாதாரங்களுக்குப் பயன்படுத்துவதற்கு விடுவிக்கப்படாமல், படைகளின் இருப்புக்காக முடக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

எமது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லை என ஆளுந்தரப்பினரும், பாதுகாப்பு தொடர்பான உயர் அதிகாரிகளும் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையில், பாதுகாப்புப் படையினர் நிலை கொள்வதற்கு தேவையான அரச தரிசு நிலங்கள் தேவைக்கு அதிகமானளவு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற நிலையில், செங்கிரிலா ஹோட்டலுக்கென எமது இராணுவ தலைமையகத்தையே அகற்றிய இந்த நாட்டுக்கு, இதே நாட்டின் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள மக்களின் காணி, நிலங்களை விடுவிப்பதற்காக உதிரி முகாம்களை அகற்ற முடியாதா? என்ற கேள்வி தற்போது தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, சிங்கள சகோதர மக்களிடத்தேயும் ஏற்பட்டுள்ளது.

தமது சொந்த காணி, நிலங்களை இழந்துள்ள எமது மக்கள் இன்று தங்களது இருப்பிடங்களை விடுவித்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டிய நிலையில், இயற்கையுடனும் நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானதொரு நிலையிலேயே நாம் இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான சமநிலைத் தன்மை குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

எனவே, எமது மக்களின் காணி, நிலங்களை விரைவாக விடுவிப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து இந்த விடயத்தில் எந்தத் தரப்பினரும் அரசியல் இலாபங்களைப் பார்க்கக்கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் மக்கள் அனுபவித்து வருகின்ற சுகபோக வாழ்க்கையை எமது நாட்டு மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் ஊடான செயற் திட்டங்கள் குறித்தே நாம் அவதானம் செலுத்த வேண்டும். அதற்கான வளங்களும், சூழலும் எமது நாட்டில் போதுமானவரை இருக்கின்றன. எனினும், திட்டமிடப்படாத வழிமுறைகளும், தூர நோக்கின்றிய கொள்கைத் திட்டங்களுமே அந்த வாய்ப்புகள் அனைத்தையும் இழக்கச் செய்து வருகின்றன.

நாம் மட்டுமே வாழ வேண்டும் என்ற சிந்தனையில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாமும் இருந்துவிட்டுப் போவேமேயானால், நாளைய எமது சமுதாயத்தின் சாபத்திற்கு நாம் உள்ளாக வேண்டிய நிலையே நிச்சயம் ஏற்படும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆகவே, நாளைய எமது சமுதாயமும் வாழ வேண்டும் என்பதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கி, அதனைப் பாதுகாத்து, இந்த நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும் என நினைத்து, செயற்பட்டு, வாழ்ந்துவிட்டுப் போவதையே நாம் எமது இலக்காகக் கொண்டு வாழ வேண்டும்.

இன்னும் ஓரிரு மாதங்களில் எமது நாட்டுக்கு ஜீ. எஸ். பி. சலுகை கிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜீ. எஸ். பி. பிளஸ் சலுகையை பெறுகின்ற நாடுகள் முக்கியமாக இரண்டு விடயங்களில் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

  1. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் நிலைபெறுதகு அபிவிருத்தியை முன்னnடுக்க வேண்டும்.
  2. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நல்லாட்சியை வலுப்படுத்த வேண்டும்.

எனவே, இந்த நாட்டில் நல்லாட்சியை வலுப்படுத்த வேண்டுமெனில், எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகள் இனங்காணப்பட்டு, அவை துரித செயல் வடிவம் பெற வேண்டியது அவசியமாகும் என்பதை இந்தச் சபையிலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

சூழல் கட்டமைப்பின் நிலைத்த தன்மைக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்கள் பற்றிய விடயங்கள் தொடர்பில் நாம் அவதானஞ் செலுத்தி, மீள் உருவாக்கத்திற்கு உட்படுத்த இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள இயற்கைக் கூறுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில், சுன்னாகம் பகுதியில் செயற்பட்டு வந்திருந்த மின்னுற்பத்தி நிலையங்களின் கழிவு ஒயில் நிலத்தில் கலக்கப்பட்டதால், அப்பகுதியின் அதிகளவிலான நிலத்தடி நீர் பொது மக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என்ற விடயம் குறித்தும், மேலும், இரசாயன உரங்களின் மிகைப் பயன்பாடு, மலக் கழிவுகள், உவர் நீர்க் கலப்பு போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்து நிலத்தடி நீர் மாசடைந்து வருவது குறித்தும் நான் ஏற்கனவே பலமுறை இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.

இது தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆய்வுகள் நடத்தப்பட்டுவிட்டதாகக் கூறிக்கொண்டு, வடக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பினர் அந்த நீரை மக்கள் பயன்படுத்தலாம் என்று கூறி,  எமது மக்களை தெரிந்தே ஆபத்தில் தள்ளிவிடும் நிலைமைகளும் இல்லாமலில்லை. தங்களது சுயலாபங்களுக்காக, தங்களது இருப்புக்காக மட்டுமே இவ்வாறு செயற்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் நபர்கள் இருக்கும்வரை, அடுத்த பரம்பரையை மட்டுமல்ல, இருக்கின்ற எமது மக்களையே சூழல் மாசடைவிலிருந்து காப்பாற்ற முடியாது என்றே நான் கருதுகின்றேன்.

ஒழுங்குறத் திட்டமிடப்படாத பல அபிவிருத்தி செயற்பாடுகள் எமது நாட்டிலே பல்வேறு அனர்த்தங்களை மட்டுமல்ல, பாரிய செலவினங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. உமா ஒய நீர்த்திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனது அகழ்வுப் பணிகள் காரணமாக இன்று இரண்டாயிரத்துக்கும் அதிகமான எமது மக்களது வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, அம் மக்கள் குடியிருக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி கிணறுகளில் நீர் வற்றியுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மீரியபெத்த மண்சரிவுக்கும் உமா ஒய திட்டமே காரணம் என்றும் ஓர் கருத்து நிலவுகின்றது.

அதே நேரம், உமா ஒய திட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்ற போதிலும், அது இன்னும் வழங்கப்படாதுள்ள நிலையும் காணப்படுகின்றது.

அதேபோன்று சமனல வெவ திட்டத்தையும் இங்கு குறிப்பிட இயலும். மீண்டும், மீண்டும் பல கோடி கணக்கான ரூபாக்களை செலவு செய்தும் சமனல வெவ திட்டத்தின்  உடைப்பெடுப்புகளை கட்டப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டிருந்தது.

சந்தை பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் விலைகளை அவதானத்தில் கொண்டே வளங்களின் பயன்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படுகின்றன. சந்தை பொருளதாரத்தில் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றபோது, குறிப்பாக, சூழல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பிலான விலைகள் அநேகமான சந்தர்ப்பங்களில் குறை மதிப்பீடுகளுக்கு உட்படுகின்றன. சூழல் வளங்களின் பயன்பாட்டின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சமூக உற்பத்தி செலவினங்களின் தனிப்பட்ட தீர்மானங்களின்போது கணிப்பு பெறாத காரணத்தினாலேயே சூழல் வளங்களினதும், சேவைகளினதும் விலை குறை மதிப்பீட்டுக்கு உட்படுகனன்றன. இதனை சந்தை வினைத்திறன் இன்மை என பொருளாதார வல்லுனர்கள் கூறுவார்கள்.  இதே நிலைப்பாட்டை நாம் பொதுவான அபிவிருத்தித் திட்டங்களுக்குள் கொண்டு வந்தால் அது அரசியல் வினைத்திறன் இன்மையாக  அமைந்துவிடும். அது, நிலைபெறுதகு அபிவிருத்தியாக அமையாது. எனவே, சூழல் வளங்கள் பயன்பாடு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதிலுள்ள வினைத்திறன் இன்மைகளை இனங்கண்டு, அதனைக் களைவதற்கான பிரதியீட்டு காரணிகளை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகளே நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன எனக் கூறப்படுகின்ற நிலையில், அந்த மக்களின் நேரடிப் பங்களிப்புகளைப் பெறாமல் அபிவிருத்தி வன்முறைகளை மேற்கொள்ளாது, மக்களின் நேரடிப் பங்களிப்புகளையும் பெற்று நிலைபெறுதகு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறிவரும் சூழல் தன்மைகளுக்கு ஏற்றவாறு சூழலுடன் இணைந்த சகவாழ்வுக்காக எமது மக்களைத் தயார் செய்து கொள்ளக்கூடிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும்,

அந்த செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வுகளை எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு வலுவுள்ள செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை - பிரதம...
எமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
வடக்கின் தொழில்துறை முயற்சிகளுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...