சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, July 21st, 2020

காலத்திற்குக் காலம் வாக்குகளை அபகரிப்பதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறியும், தமது இயலாமையினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விருப்பம் இன்றியும், அரசுகள் மீது மட்டுமே குறைகளை சுமத்தி, சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன், ஞானகலா சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

மக்கள் அல்லலுறும்போது தமது சுயநலன்களுக்காக வெளிநாடுகளுக்கு ஓடிச்சென்றவர்களும்  கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தாதவர்களும், சந்தர்ப்பங்களை உருவாக்க விரும்பாதவர்களும், அரசியல் அதிகாரங்களை மக்களின் நலனுக்காக வினைத்திறனோடு செயற்படுத்த இயலாதவர்களும், இன்று மக்கள் முன் மறுபடியும் வாக்குக் கேட்டு வருகின்றனர்.

தமிழர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்களதும் இணக்க அரசியலின் பெயரால் ஏமாற்று அரசியல் நடத்தியவர்களதும் உண்மை முகங்களை மக்கள் இன்று அறிந்து கொண்டுள்ளனர். இதனால்  மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

இந்த மாற்றத்திற்கு தலைமை ஏற்கும் தார்மீக பொறுப்பானது இன்று எம் மீதே சுமத்தப்பட்டுள்ளது. அதை நான் ஏற்கின்றேன். மாற்றுத் தலைமை என்பது இந்த மக்களோடு மக்களாக வாழாமல், மக்களுக்கு வெளியே இருந்து வருபவராகவோ, கடந்த காலத்தில் நாம் முன்னெடுத்த உரிமைக்கான போராட்டத்தை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து, அதை தமது பிழைப்பிற்காக மாத்திரம் பயன்படுத்தி கொண்டவர்களாகவோ இருக்கமுடியாது.

மக்களோடு வாழ்ந்து, மக்கள் அனுபவித்த வலிகளிலும், துயரங்களிலும் பங்கெடுத்து, மக்களின் தேவையறிந்து செயற்படும் செயல் வீரரே மக்கள் தலைவராக திகழமுடியும்.

கடந்த காலங்களில் நான் வெளிப்படையாக மக்கள் நலன்கருதி முன்வைத்த கருத்துக்கள் உங்களை முழுமையாக வந்து அடையவில்லை. அதற்கு சில தடைகள் இருந்ததையும் நான் மறுக்கவில்லை.

அந்தவகையில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும். சரியான பாதையில் பயணிக்க எம்முடன் அணிதிரண்டு வாருங்கள் என தெரிவித்த அமைச்சர்  வீணைக்கு வாக்களித்து உங்களை நீங்களே பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:


கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோ...
கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பே...
நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எ...