சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மீள் ஏற்றுமதிகளை தடைசெய்ய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, March 21st, 2019

அண்மைக் காலமாக இந்த நாட்டில் மிளகு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு இடர்பாடுகள் தொடர்பில் மிகவும் பரவலாகவே பேசப்பட்டிருந்தது.

மறுபக்கத்தில் மீள் ஏற்றுமதி மிளகு காரணமாகவே இந்த நாட்டு மிளகு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமன்றி, இந்த மீள் ஏற்றுமதி தொடர்பில் அதிக அவதானங்களை எடுத்து, அதனை தடுத்து நிறுத்தாவிட்டால், இந்த நாட்டின் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் தொடர்பிலான சர்வதேசத்தின் நம்பிக்கையானது  மேலும் சிதைந்துவிடும்.  இப்போதே சிதைந்து வருகின்றது என்றே தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

குறிப்பாக பாக்கு ஏற்றுமதி வர்த்தகமானது தற்போது வலுவிழந்துக் காணப்படுவதாகவே தெரிய வருகின்றது. கடந்த காலங்களில் கருங்கா – கொட்டப் பாக்குகள் இங்கிருந்து மீள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் விளைவே இதுவெனக் குறிப்பிட இயலும். இனிவரும் காலங்களில் இத்தகைய மீள் எற்றுமதிகள் முற்றாகத் தடைசெய்யப்படுவதோடு, உள்நாட்டு மிளகு மற்றும் பாக்கு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் ஏற்றுமதி தொடர்பில் அவதானங்களைச் செலுத்த வேண்டும்.

அதேநேரம், கித்துள் வளம் தொடர்பில் அதிகார சபை ஒன்று எற்படுத்தப்படப் போவதாகத் தெரிய வருகின்றது. இதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் நான் பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய வெளிநாட்டு சந்தைவாய்ப்புகளின் கேள்விகளுக்கிணங்க கித்துள் உற்பத்திகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவே தெரிய வருகின்றது. அந்தவகையில், இத்துறையை மேலும் நவீன முறையில் வளர்த்தெடுக்க முடியும் என நம்புகின்றேன்.

அதேபோன்று, வெற்றிலைச் செய்கையினை வடக்கு மாகாணத்திலும் மேலும் செழிப்பான முறையில் முன்னெடுக்க முடியும். இலங்கை வெற்றிலைக்கும் சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்புகள் இருப்பதாக அறிய முடிகின்றது.

அதேபோன்று கறுவா, ஏலம், சாதிக்காய் போன்ற பாரம்பரிய சிறு எற்றுமதிப் பயிர்கள் தொடர்பிலும் நிறையவே அவதானங்கள் செலுத்தப்பட்டால் இந்த நாட்டிற்கு மிக அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகை பயிரினங்கள் நிறையவே – இயல்பாகவே செழிப்பாக வளரக்கூடிய சூழல் இருந்தும் இந்த நாட்டில் அது அவ்வளவு தூரம் கணக்கில் எடுக்கப்படாத நிலைமையானது துரதிர்ஸ்டவசமானதாகும்.

அதேபோன்று இந்த நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஏனைய சிறு ஏற்றுமதிப் பயிர்கள் தொடர்பிலும் கவனமெடுத்து, அவற்றை வளர்த்தெடுப்பதற்கும், அதுசார்ந்த உற்பத்தியில் இந்நாட்டு மக்களை ஊக்குவிப்பதற்குமான முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.

Related posts:

யுத்தப் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு என்ன நடந்தது? - செயலாளர் நாய...
‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ திட்டம் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவுசெய்யவில்லை – நாடாளுமன்றில் டக...
இணுவில் புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்புத்துவைத்தார் அமைச்சர் டக்ள...

தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை நிர்க்கதியாக்கிவிட்டது - அரியாலை மத்தி மக்கள் ஆதங்கம்!
வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட...
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல் பொருளாதாரத்தை வலுப்...