சிங்கள சொற்பதங்களுக்கு தமிழ் பதம் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Saturday, November 26th, 2016

தற்போது நாட்டில் ‘விதாதா வள’ நிலையங்கள் பரவலாக அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் மூலமான பயன்பாடு எமது மக்களுக்கு உரிய வகையிலும், போதுமானதாகவும் கிடைக்கின்றனவா? என்பது தொடர்பில் தொடர் கண்காணிப்புக்களை மேற்கொள்வது அவசியமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

விதாதா வள’ நிலையங்களில் பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கு மாறி வருகின்ற உலகில் அடிக்கடி மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நவீன தொழில் நுட்பங்களையும் பயிற்றுவிக்க வேண்டும்  என்ற கோரிக்கையையும்,

அதே நேரம் இங்கு பெற்றுக் கொள்ளக் கூடிய பயன்பாடுகள் தொடர்பில் மக்களுக்குப் போதிய தெளிவை உண்டு பண்ணக்கூடிய வகையில் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தச் சந்தர்ப்பத்திலே நான் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். அத்துடன்,‘விதாதா’ என்ற சொற்பதத்தை தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மத்தியில் தமிழில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மொழி புரியாத காரணங்களும் எமது மக்கள் மத்தியில் இவ்வாறான பயனுள்ள திட்டங்கள் சென்றடைவதில் தடைகளை ஏற்படுத்துகின்றன. இதனைக் கௌரவ அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

அத்துடன் விஞ்ஞானத் துறைசார்ந்த அனைத்து விடயங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், ஒரு விஞ்ஞான நிலையம் அமைக்கப்பட வேண்டியுள்ளது. இதில் விஞ்ஞானம் சார்ந்த அனைத்து விடயங்களுடனும் விஞ்ஞான நேரடி செய்முறைக் கண்காட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.

அத்துடன்இந்த நிலையத்தால் மேற்கொள்ளப்படுகின்ற விளக்கங்கள் பொது மொழி என்ற வகையில் ஆங்கிலத்தில் அமையப் பெற்றாலும், சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல மக்களுக்கு அவரவர்களின் தாய் மொழிகளிலும் அந்த விளக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எனது ஆலோசனையையும் இங்கு முன்வைக்க விரும்புவதுடன்,

இந்த நிலையத்தை அமைக்க இந்த அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாக ஒரு தகவல் இருந்து வரும் நிலையில், அது தொடர்பிலான முயற்சிகள் தற்போது எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிய விரும்புகின்றேன்.

அத்துடன் நாட்டில் விவசாயத்துறை சார்ந்து பல்வேறு நவீன தொழில்நுட்ப அறிவினை வழங்குவதனை அமைச்சு மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதனூடாக எமது நாட்டின் விவசாயத்துறை உற்பத்திகளை மேலும் அதிகரிப்பதற்கும், வளப் பயன்பாடுகள் மற்றும் உற்பத்தி செலவினங்களைக் குறைப்பதற்கும் ஏதுவாக அமையும் என நம்புகின்றேன்.

அதே நேரம் புதிய கண்டு பிடிப்புகள் தொடர்பில் எமது மாணவர்களிடையே நல்ல திறமைகள் காணப்படுகின்றன. மாணவர்கள் மட்டத்தில் மட்டுமல்லாது, பல தரப்பினர் மத்தியிலும் இத் திறமைகளை நாம் கண்டு வருகின்றோம். இவ்வாறானவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் வலுவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த அமைச்சு அதிக அக்கறை கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

002

Related posts: