சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, March 29th, 2024

பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று (29.03.2024) இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“போதனா வைத்தியசாலைக் கழிவுகளை தொற்று நீக்கி பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியம் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்ததுடன் பல்வேறு முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில்,  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த எரியூட்டி, நீண்டகால எதிர்பார்ப்பிற்கான தீர்வாக அமைந்துள்ளது.

இதற்காக உழைத்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.

முன்பதாக யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில்  பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன் மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு திட்டமும் பிரதேசத்தின் அபிவிருத்தி அல்லது மக்களின் முன்னேற்றத்திற்கு ஏதுவான நிலைகள் அல்லது காரணிகளை கொண்டிருந்தால் அதனை வலுப்படுத்தி ஊக்கமளிப்பதே எனது நிலைப்பாடாக இருந்துவருகின்றது.. அந்தவகையில்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி அமைப்பதற்காக எனது ஆதரவினையும் வழங்கியிருந்தேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

மேலும் இன்று இந்த எரியூட்டி வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டு இயங்கு நிலைக்கு வந்துள்ளதென்றால் அதற்கு வைத்தியர் சத்திமூர்த்தியின் உழைப்பும் முக்கியமானதாக உள்ளது. அதுமட்டுமல்லாது இதை அமைப்பதற்கு எதிர்கொண்ட பிரச்சினைகள் சவால்கள் அனைத்தையும் நானும் அறிவேன்.

இந்நிலையில் குறித்த விடயம் எனது கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டிருந்தது. நான் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் போதனா வைத்தியசாலை எதிர்கொண்டுவந்த சவால்களை அறிந்திருந்தவன் என்ற வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த திட்டத்தை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தேன். அதனடிப்படையில் இன்று குறித்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது..  

மேலும் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை சிறப்பாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும். அதுமட்டுமல்லாது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும் முக்கியமாகும். இதற்கு பொலிஸ் காவலரண் ஒன்றையும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேநேரம் கடந்த காலத்தில் குறிப்பாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநகரின் முதல்வராக இருந்த காலப்பகுதியில் எமது கடும் முயற்சியின் பயனாக இந்த மயானத்தில் பொதுமக்களின் தேவைக்காக ஏற்கனவே ஒரு மின் எரியூட்டி அமைக்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக இயங்கிவருகின்றது.

அந்தவகையில் இந்த மயானத்தை ஒன்றியதாக ஒரு மலர்சாலையும் செயற்படுத்த வேண்டும் என கோம்பயன் மணல் இந்து மயான நிர்வாகத்தின் செயலாளர் தெரியப்படுத்தியுள்ளார். அதுவும் காலக்கிரமத்தில் அமைக்கப்படும் என நம்பகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றி விட்டனர்: வெள்ளாங்குளத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களின் முயற்சியை ஊக்குவிக்க கரு...

விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை - பிரதம...
எமது அரசியல் கொள்கைக்குள் பிரிவினைக்கு இடமில்லை - டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிக்காட்டு!
ஊழியர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் - வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்களுடனான சந்திப்பில் டக...