சமூக வளர்ச்சிக்கு அனைவரும் அக்கறையோடு உழைக்கவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 26th, 2017

விளையாட்டுத்துறையை மட்டுமல்லாது சமூகத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அனைத்து தரப்பினரும் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் குருநகர் விங்ஸ் மற்றும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய சமூகம் சரியான வழிமுறையில் வழிநடத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. யுத்த சூழலுக்குள் இருந்து மீண்டுவந்துள்ள எமது சமூகம் இன்று மாறுபட்டதொரு நிலையில் வாழ்ந்துவருகின்றது.

இந்நிலையில் இன்று சமூகத்தில் பல்வேறுபட்ட சமூகவிரோத மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத பல சீரழிவுகளும் தலைவிரித்தாடுகின்றன. இந்நத நிலை தொடருமானால் எமது இளைய சமூகம் எதிர்காலத்தில் அதல பாதாளத்துக்கு செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்படும்.

எனவே எமது இளைய சமூகத்துக்கு நல்வழியைக்காட்டி அவர்களுக்கு சரியான நெறிப்படுத்தலை வழங்குவதனூடாகவே எதிர்காலத்தில் நம்பிக்கையான ஒரு எதிர்காலத்தை கட்டியெழுப்பமுடியும் என தெரிவித்தார்.

இதனிடையே இரு விளையாட்டுக் கழகங்களினதும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா தேவைப்பாடுகளின் அடிப்படையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது சட்டத்தரணி ரெங்கன், யாழ்மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Related posts: