சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Thursday, March 21st, 2019

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களது எண்ணக் கரு மூலமாக இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ‘ஜனசவிய’ – மக்கள் வலு – உதவித் திட்டத்தின் தொடர்ச்சியாக 1994ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசினால் கொண்டுவரப்பட்ட ‘சமுர்த்தி” – சுபீட்சம் – திட்டத்தின் மூலமாக கடந்த ஆண்டு நடுப்பகுதி வரையில் சுமார் 14,22,557 குடும்பங்கள் பயன்பெற்று வருவதாகவும், மேலும் 1,50,000 குடும்பங்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறு கூறப்பட்டிருந்த 1,50,000 பயனாளிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டார்களா? என்பது கேள்விக்குறியான விடயமாக இருக்கின்ற நிலையில், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சமுர்த்தி உதவித் திட்டத்திற்கென 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்;ளப்பட்டுள்ளது.

புதிதாக சமுர்த்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகின்ற பயனாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு உட்பட்டே உதவிகள் வழங்கப்படும் என்றும், அந்த கால வரையறைக்குள் அவர்கள் பொருளாதார ரீதியில்  பலப்படுத்தப்பட்டு விடுவார்கள் என சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

ஆகவே, இவ்வாறு புதிய பயனாளிகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் பொருளாதார ரீதியில் பலப்படுத்த முடியுமானால், இதற்கு முன்பிருந்தே சமுர்த்தி உதவி பெற்று வருகின்ற குடும்பங்களை ஏன் இன்னும் பொருளாதார ரீதியல் பலப்படுத்த முடியாது போய்விட்டது? என எமது மககள் மத்தியில் கேள்விகள் எழுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பங்களிப்பு அபிவிருத்தியின் பிரவேச அடிப்படையிலான சமுர்த்தித் திட்டமானது, பல்வேறு சக்திகளால் காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பலஹீனமான மக்களின் ஆக்க ரீதியிலான ஆற்றல்களை கூட்டிணைந்த முயற்சியின் ஊடாக வெளிப்படுத்தி, அம் மக்களுக்கு சாதகமான வகையில் – தற்போது நடைமுறையிலுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி, அம் மக்களது முயற்சியினால் உருவாகும் பங்களிப்புத் திட்டமென வரையறைப்படுத்தப்படுகின்றது.

பல்வேறு சக்திகளால் அடக்கி வைக்கப்பட்டிருந்த எனும்போது இது குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை மிக அதிகமாகவே சுட்டிக்காட்டுகிறது என்றே தற்போதைய இந்த நாட்டின் நிலையிலிருந்து குறிப்பிடப்படல் வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும். அதில் இன்னும் ஒரு படி நிலை தாண்டி, ‘பல்வேறு சக்திகளால் அடக்கி வைக்கப்படுகின்ற மக்கள்’ என்றும் கூட வடக்கு மாகாண மக்களை குறிப்பிட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இந்த நிலையில் இன்று கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்படி சமுர்த்தி உதவிகளை எதிர்பார்த்தவர்களாக பல ஆயிரக் கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்டுள்ள 23 கிராம சேவையாளர் பிரிவுகளில் எவ்விதமான சமுர்த்திக் கொடுப்பனவுகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக எடுத்துக் கொண்டால், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தைக் கிழக்கு உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 136 கிராம சேவையாளர் பிரிவுகளிலும், வெலிஒயா பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவையாளர் பிரிவுகளிலுமிருந்து தற்போது 11 ஆயிரத்து  52 பேருக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற நிலையில், மேற்படி 23 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழ்கின்ற 9 ஆயிரத்து 551 பேர் சமுர்த்தி உதவிகள் பெற தகுதியிருந்தும், அவர்கள் இன்னமும் சமுர்த்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என்றே தெரிய வருகின்றது.

மேலும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுர்த்தி உதவிகள் பெற தகுதியுடைய பல ஆயிரக் கணக்கான மக்கள் இன்னமும் சமுர்த்தி உதவித் திட்டத்திற்குள் உள்வாங்கப்படாதுள்ளனர்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யாழ்;ப்பாணம் மாவட்டத்திலே 36 ஆயிரத்து 334 குடும்பங்கள், கிளிநொச்சி மாவட்டத்திலே 8 ஆயிரத்து 435 குடும்பங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலே 5 ஆயிரத்து 961 குடும்பங்கள், வவுனியா மாவட்டத்திலே 6 ஆயிரத்து 712 குடும்பங்கள், மன்னார் மாவட்டத்திலே 5 ஆயிரத்து 903 குடும்பங்கள் என 63 ஆயிரத்து 345 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக வாழ்கின்றன.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் சுமார் 40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பெண்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்குக் குறைந்தவர்களாகவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 23 ஆயிரம் பெண் தலைமைக்  குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 

இவர்களைத் தவிர பொருளாதார ரீதியில் மிகவும் வலுவற்ற நிலையில் மேலும் பல குடும்பங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே வாழ்ந்து வருகின்றன.

Related posts: