சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, July 4th, 2018

எமது பகுதிகளைப் பொறுத்தவரையில், விவசாய உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தல் வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அதே நேரம், அவ்வப் பொருட்களின் இறக்குமதிகள் காரணமாக இருக்கின்ற ஓரளவு சந்தைவாய்ப்புகளும் பறித்தெடுக்கப்படுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான  பிரேரணைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது பகுதிகளில் புகையிலைச் செய்கை மூலமான பொருளாதார ஈட்டல்களை குறிப்பிட்டளவு விவசாய மக்கள் பெற்றுக் கொள்கின்ற போதிலும், 2020ஆம் ஆண்டளவில் புகையிலை முற்றாகத் தடை செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் கொள்கை நிலை காரணமாக மேற்படி புகையிலைச் செய்கையை அத்துறை சார்ந்த விவசாய மக்கள் கைவிட வேண்டி வரும். இந்நிலையில், இதற்கான மாற்றுப் பயிரினை அறிமுகப்படுத்தி, அதனை ஊக்குவிக்குமாறு உங்களிடம் கேட்டால், மிளகாய், வெங்காயம், கற்றாளை என்பன மாற்றுப் பயிர்களாக செய்கை பண்ண முடியும் எனக் கூறுகின்றீர்கள்.

கற்றாளை செய்கை பண்ணினால், அவற்றை கொள்வனவு செய்யக்கூடிய ஏற்பாடுகள் உங்களிடம் இருக்கின்றனவா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

இல்லை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தி செய்தால் அவற்றிற்கான சந்தை வாய்ப்புகள் உங்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமா? மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றின் இறக்குமதிகளை உள்ளூர் அறுவடைக்காலங்களின்போதும், அதற்குப் பிந்திய – அதாவது உள்ளூர் உற்பத்திகளை விற்றுத் தீர்க்கும் வரையிலான காலப்பகுதியிலும் முற்றாகத் தடை செய்ய முடியுமா?  எனக் கேட்க விரும்புகின்றேன்.

முடியாது! இப்போதுகூட உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான விலைகளைக் கோரி வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். பூசனி செய்கையாளர்கள் தங்களது அறுவடைகளை வீதிகளிலே குவித்து இலவசமாக அள்ளிச் செல்ல வழிவிட்டு, அழுது கொண்டிருக்கின்றனர். மரக்கறி செய்கையாளர்கள் காட்டு யானைகளுக்கு தங்களது அறுவடைகளைப் போட்டுவிட்டு, பட்டினி கிடக்கின்றனர்.

ஆக, இப்போது இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற விளைப் பொருட்களே உரிய சந்தைவாய்ப்பகளோ இன்றி, நியாயமான விலையோ கிடைக்காத நிலையில், மேலும் மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை உற்பத்தி செய்து எமது விவசாய மக்கள் நடுத் தெருவில்தான் நிற்க வேண்டி வரும் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

எனவே, உணவுப் பொருட்கள் தொடர்பில் இந்த அரசோ, வேறு எந்த அரசோ மிகவும் அவதானமான நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:


யுத்தப் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு என்ன நடந்தது? - செயலாளர் நாய...
எமது வாழ்வே கேள்விக்குறியான போது அதனைப் பாதுகாத்து  நம்பிக்கையூட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - எ...
சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் - நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரி...