சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மையை முழுமையாக தடுக்க வருகிறது ஒழுங்குவிதிகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021

தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்ட, சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மை செயற்பாடுககளை முழுமையாகத் தடை செய்;வதற்கான ஒழுங்குவிதிகளை நாம் கொண்டு வருவதுடன், அதனை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தவதற்கு கடல் ரோந்து நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்த ஒரு கூட்டு ஏற்பாடாக மேற்கொள்வது, கடல் வளத்தைப் பேண பாதுகாப்பு காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளை நியமிப்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கழு நிலை விவாதத்தில் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சு அதொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இம்முறை கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைக்கென  3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கும் மேலதிகமாக 1000 மில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும், தேவைகள் கருதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து நாடாளுமன்றத்தின் ஊடாகத் தேவையான மேலதிக நிதியை குறைநிரப்பு பிரேரணை மூலம் பெற்றுக் கொள்ள முடியும். நாம் எமது வேலைத் திட்டங்களை அதிகளவில் தனியார் துறையுடனும் இணைந்ததாகவே விஸ்தரித்துச் செல்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் கடற்றொழில் தொடர்பிலும், நன்னீர் வேளாண்மை தொடர்பிலும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தின் மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்திற்கு அமைவாக மேலும் பல்வேறு வேலைத் திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் முன்னெடுப்பதற்கும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம்.

இதேநேரம் கண்டல் தாவரங்களின் அழிவினைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றை நடுகை மற்றும் மீள் நடுகைச் செய்வதற்கும், அதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்து இளைஞர், யுவதிகளை பணிகளில் அமர்த்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமானதும், நியாயமான விலைகளிலுமான மீன் வகைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கென மத்திய மீன் சந்தைகளை ஆரம்ப கட்டமாக கண்டி, இரத்தினபுரி, தம்புள்ளை, குருனாகலை மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளில் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

கடந்த கால உதாசீனப் போக்குகள் காரணமாக மூடப்பட்டுள்ள குளிரூட்டி தொழிற்சாலைகள், அதி விறைவிப்பான் தொழிற்சாலைகள் போன்றவற்றை மீளத் திறப்பதற்கும், தேவைக்கேற்ப புதிய தொழிற்சாலைகளை நிறுவுதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்

அத்துடன் சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கத்ததக்க இயந்திரங்களின் மூலம் உலர்த்தும் வகையில், புதிய மீன்களைக் கொண்ட கருவாடு மற்றும் மாசி உற்பத்தியினை ஏற்றுமதித் தரத்திற்கேற்ப மேற்கொள்வதற்கும், இதற்கென தேர்ந்தெடுக்கப்படுகின்ற பகுதிகளில் கருவாடு மற்றும் மாசி உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சிறியளவிலான மீன் வலைகள் உற்பத்தி தொழிற்சாலைகள், படகு இயந்திர பழுதுபார்க்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அது சார்ந்த கைத்தொழில் நிறுவனங்கள், சிறியளவிலான மீன் பதப்படுத்தப்படும் நிலையங்கள் போன்றவற்றை தகுந்த இடங்களில் அமைப்பதற்கும், அதற்கென முன்வருபவர்களுக்கு வங்கிக் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

ஆழ்கடல் கடற்றொழில் தொடர்பில் பங்களிப்புகள் காட்டப்படாதுள்ள பகுதிகளிலும், பங்களிப்புகள் குறைந்து காணப்படுகின்ற பகுதிகளிலும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அத் தொழிற்துறையை ஊக்குவிப்பதற்கும், கை மூலமான நீள் வரித் தூண்டில் கடற்றொழில் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள  அமைச்சர் இதன் மூலம் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேநேரம் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளை குறைப்பதற்கு மேலும் சூரிய மின்சக்தி பயன்பாட்டைக் கொண்ட கடல் நீர் குளிரூட்டி ஏற்பாடுகளை படகுகளுக்கென அறிமுகஞ் செய்வதற்கான ஏற்பாடுகளை நாம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதுடன், புதிதாக படகுகளைத் தயாரிக்கின்றபோது இந்த நவீன முறையை படகுகளில் உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதுவரையில், பலநாட் களங்களின் அறுவடைகளை காலதாமதமின்றி கரைக்குக் கொண்டு வருவதற்கென தாய் களமொன்றின் தேவை தொடர்பிலும் உணரப்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்து கொள்வார்களாயின் எதிர்காலம் சுபீட்சமாகும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு - கடற்றொழிலாளர் விவகாரத்தையும் தீர்க்குமாறு வ...