சக தமிழ் கட்சிகள் மீது விமர்சனம் வைப்பதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியல்ல. எனது ஆதங்கமே – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 23rd, 2017

சக தமிழ் கட்சிகள் மீதோ சக இயக்கங்கள் மீதோ நான் விமர்சனம் வைப்பதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல. அது எனது ஆதங்கமே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் இன்றையதினம்(23) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் சங்கத் தலைவர் விஜயராசா தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்தகாலங்களில் சங்க உறுப்பினர்களாகிய நீங்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தபோதிலும் அவற்றில் சிலவற்றிற்கு உரிய தீர்வுகளை நாம் பெற்றுத்தந்திருக்கின்றோம். ஆனாலும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதே எனது பெருவிருப்பாகும்.

எனவே வர இருக்கின்ற சந்தர்ப்பங்களை சங்க உறுப்பினர்கள் சரியான முறையில் பயன்படுத்தி தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு எமக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் எமது பிரச்சினைகளுக்கும் நீங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் இடர்பாடுகளுக்கும் சரியான தீர்வுகளை பெற்றுத்தருவேன்.

உங்கள் சங்கம் மட்டுமன்றி எமது மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிச்சினைகளையும் சரியான முறையில் அணுகி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு எந்த சவால்களையும் எதிர்கொள்வதற்கும் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம்.

அந்தவகையில்தான் சக தமிழ்க் கட்சிகள் மீதோ சக இயக்கங்கள் மீதோ நான் விமர்சனங்களை முன்வைப்பதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல அவர்கள் எமது மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்ற ஆதங்கமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது முன்னாள் தலைவரான காலஞ்சென்ற மனோகரனின் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் மரணசகாய நிதியை டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: