சக அரசியல் கட்சிகளை நான் விமர்சிப்பதென்பது காழ்ப்பு ணர்ச்சி காரணமாக அல்ல: அவர்கள் வரலாற்றில் விட்ட தவறுகளை பகிரங்கப்படுத்தவே – டக்ளஸ் எம்.பி !

Friday, January 19th, 2018

கடந்தகால அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தோற்றுப் போனமைக்கும் நிறைவேறாது போனமைக்கும் குறித்த அரசியல் தலைமைகள் முன்வைத்த கோரிக்கைகள் நம்பிக்கையுடனோ அன்றி விசுவாசத்துடனோ செயற்படாமையே பிரதான காரணம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நான் ஏனைய சக அரசியல் கட்சிகளை விமர்சிப்பதென்பது ஒரு காழ்ப்புணர்ச்சி காரணமாக அல்ல. அவர்கள் வரலாற்றில் விட்ட தவறுகளையும் பிழைகளையுமே பகிரங்கமாக சுட்டிக்காட்டி வருகின்றேன்.

எமது நிலைப்பாடு என்பது எப்போதுமே நியாயத்தினதும் உண்மையினதும் அடிப்படையிலுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் எத்தனையோ சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து எமது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தியிருந்தோம்.

ஆனால் தேசியவாதமும் தீவிரவாதமும் பேசிக்கொள்ளும் போலித் தமிழ் அரசியல் வாதிகளின் மத்தியில் புதிதாக முளைத்த பல்வேறு கட்சிகளும் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிடத் தயாராகி வருகின்றன.

ஆனாலும் இந்தக் கட்சிகளுக்கு மத்தியில் நின்றுதான் எமது வெற்றியை நாம் உறுதி செய்யவேண்டும் அந்தவகையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் மக்களுக்கு உண்மை நிலைமைகளை யதார்த்தத்தைத் தெளிவுபடுத்தவேண்டும். அதுமாத்திரமல்லாது  தீர்க்கப்படக் கூடியதான பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் இந்த மாவட்டத்தின் பிரதேச சபைகளை வெற்றிகொள்ளும் பட்சத்தில் நிச்சயம் நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவோம்.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தளவில் ஒரு நகர சபையை உருவாக்க வேண்டும் என்பதில் அரசிடம் நாம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எதிர்காலங்களில் எமது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்பதுடன் கண்டாவில் பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பிலும் கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் தவிசாளர் மித்திரன், தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts:

கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு  சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவா...
எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்...
யாழ் - கிளிநொச்சி காணிகளை விடுவிப்பது தொடர்பில் புதிய நகர்வு - அமைச்சர் டக்ளஸ் ஏற்பாட்டில் நாடாளுமன்...