கொழும்பு துறைமுக நகரின் உரிமை யாருக்கு உரியது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 23rd, 2019

கொழும்பு துறைமுக நகரம் அல்லது சர்வதேச பொருளாதார நகரம் என்கின்ற இந்த கடலிலிருந்து பெறப்பட்ட பகுதியானது 446.6153 ஹெக்டயர் நிலப் பரப்பைக் கொண்டது எனக் கூறப்படுகின்றது. இந்தப் பகுதி கொழும்பு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுடன் இணைக்கப்படவுள்ளதாகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.

சரி பிழைகளுக்கப்பால் இன்று இந்த துறைமுக நகரம் அமைக்கப்பட்டு இதனது ஐந்து வலயங்களில் ஒன்றான பொருளாதார வலயத்தின் நிர்மாணப் பணிகள் 2025ஆம் ஆண்டளவில் நிறைவுறும் என்றும் முழுமையான பணிகள் மேலும் 25 ஆண்டுகளில் நிறைவுபெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இந்த ஐந்து வலயங்களில் முக்கிய வலயமாக பொருளாதார வலயம் அமையப்பெறவுள்ளதுடன் பொது மக்களது பொழுதுபோக்கு தொடர்பிலான செயற்கை கடற்கரை அடங்கலான பூங்கா சார்ந்த வலயம் சர்வதேச விடயங்களுக்கான சர்வதேச தீவு என்கின்ற வலயம் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான ஒரு மென் படகுத்துறை சார்ந்த வலயம் சொகுசு மாளிகைகள் அடங்கியதான ஒரு தீவு வலயம் என்பன ஏனைய வலயங்களாக அமையப்பெற உள்ளன எனக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஐந்து வலயங்களையும் பொறுத்தமட்டில் இந்த நாட்டிலே வாழுகின்ற சாதாரண மக்களுக்கான வாய்ப்புகள்  எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்ற நிலையில் இந்த சர்வதேச விடயங்களுக்கான வலயம் என்பது எத்தகைய சர்வதேச விடயங்களுக்கானவை? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

இந்த துறைமுக நகர் பகுதியின் நிலங்களின் உரிமம் யாருக்கானது? என்ற கேள்வி எழுகின்ற நிலையில்தான் இந்த சர்வதேச விடயங்கள் யாருக்கானவை என்பது தொடர்பில் பதில் எழும் என நினைக்க முடிகின்றது. 

மேற்படி நகரின் பொருளாதார வலயத்தில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் முதலீட்டாளர்களை கொண்டுவரக்கூடிய உரிமை இலங்கைக்கு இல்லாது போகின்ற சந்தர்ப்பத்தில் அந்த நகரின் ஊடாக இந்த நாட்டின் இறைமைக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படும் என சூழலியலாளர்கள் குறிப்பிட்டு வருவதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

அதேநேரம் துறைமுக நகரை அண்டியதான கடலில் கடற்றொழில் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். அதுவும்கூட எமது நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாத ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுவிடும் போலவே தோன்றுகின்றது.

இந்த வகையில் பார்க்கின்றபோது பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் உருவாகி வருகின்ற துறைமுக நகர் என்பது கொழும்பு பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டாலும் அது வெறும் பெயரளவிலான ஒரு பகுதியாக இப் பிரதேச செயலகத்திகுள் இருக்கும் போலவே தோன்றுகின்றது.

கொழும்பு பிரதேச சபையை பொறுத்தவரையில் பொருளாதார ரீதியில் ஓரளவு நடுத்தர மற்றும் பாரியளவில் வறிய மக்களுமாக வாழ்ந்து வருகின்ற பகுதியாகவே காணப்படுகின்றது. இந்தப் பகுதியானது பாரிய வர்த்தக முயற்சிகளை பெரும்பாலாக கொண்டிருந்தாலும் இந்தப் பகுதியில் வாழுகின்ற பெரும்பாலான மக்கள் அந்த வர்த்தக முயற்சிகளில் ஊழியர்களாகவே பங்கேற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகையதொரு நிலையில் இந்தப் புதிய நகரம் – அதாவது துறைமுக நகரம் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படுவதால் இந்தப் பகுதியில் வாழுகின்ற மக்களுக்கு ஓரளவு ஊழியப் பங்களிப்பைத் தவிர – சிலவேளை அதுவும் நிச்சயமில்லை – வேறு எவ்விதமான நன்மைகளும் கிட்டாமல் போய்விடலாம் என்பதையும் முன்கூட்டியே இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கு காலம் பதில் சொல்லும் என நினைக்கின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற  நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

வர்த்தமானி அறிவிப்பை திருத்தியமைக்க பிரதமர் இணக்கம் - டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன்.
மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்...
நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை அங்குரார்ப்பணம்!

ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
தொலை நோக்கில்லாமல் சுயநோக்குடனேயே திட்டங்கள் வகுக்குப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச...