கொழும்புக் கழிவுகளுக்கே தீர்வில்லை : வெளிநாட்டுக் கழிவுகளால் யாருக்கு இலாபம்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 24th, 2019

அண்மையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்பேட்டை பகுதிக்குள்ளிருந்து பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற மருத்துவக் கழிவுகள் கொண்ட 130 கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இன்று கொழும்பில் சேருகின்ற கழிவுகளையே அகற்றிக் கொள்வதற்கு கடினமாக இருக்கின்ற ஒரு காலகட்டத்தில்  வெளிநாட்டுக் கழிவுகளையும் இறக்குமதி செய்வதென்பது சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கின்றது.

இந்த மருத்துவக் கழிவுகள் மீள் ஏற்றுமதிக்கென இறக்குமதி செய்யப்பட்டவை எனக் கூறப்பட்டாலும் அவற்றில் ஏற்கனவே 57 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டாலும் இத்தகைய மருத்துவக் கழிவுகள் கொண்டு தருகின்ற பாதிப்புகள் குறித்தும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் சிந்திக்கப் போவதில்லை. எனவே இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது.

கடந்த 2013 ஜூலை மாதம் 30ஆம் திகதியைக் கொண்டதாக 2013 ஜூலை மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 1818 – 30ஆம் இலக்கத்தைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக சுதந்திரமாக பொருட்களை இறக்குமதி செய்கின்ற வாய்ப்பு கிட்டியதன் காரணமாக இத்தகைய கழிவுகள் சுரங்கக் கட்டளைச் சட்டம் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுக் கட்டளைச் சட்டம் போன்றவற்றின் கட்டுப்பாடுகள் இன்றி இப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

என்றாலும் இந்த வர்த்தமானி அறிவித்தல் 2013ஆம் ஆண்டு வெளிவந்துள்ள நிலையில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளின் போதுதான் மேற்படி மருத்துவக் கழிவுகள் இறக்குமதியாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...
நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டு...