கொலைக் கூடங்களை கண்ட மக்கள் கலைக்கூடங்களை காண்கிறார்கள் – அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!

Monday, January 17th, 2022

கொலைக் கூடங்களைக் கண்ட மக்கள் கலைக் கூடங்களை காண்கிறார்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  உருவாகும் கலைக்கூடம் தமிழையும் தர்மத்தையும் வளர்க்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் கிளிநொச்சியில் உருவாக்கப்படவுள்ள கலைக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரயாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றி கடற்றொழில் அமைச்சர், “கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம் என்ற கனவு இலட்சியங்களின் ஒன்று இன்று நிறைவேறுகின்றது.

யுத்த காண்டத்தில் கொலைக்கூடங்களை கண்ட எமது மக்கள் இன்று கலைக்கூடங்களை காண்கிறார்கள்.

இலக்கியம் என்பது வாழும் மக்களுக்கு மட்டுமன்றி  வரலாறெங்கும் வாழப்போகும் மக்களுக்கும் சிறந்த வழிகாட்டுதலை வழங்க வேண்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் என்ற உயர்ந்த இலட்சியங்களையே தமிழ் இலக்கியங்கள் யாவும் கொண்டிருக்கின்றன.

ஆனாலும் போரியல் இலக்கியங்கள் பலவும் மக்களின் அவலங்களை பாடுவதை விட்டு  மன்னர்களின் மணிமகுடங்களை மட்டுமே  புகழ்ந்து பாடியிருக்கின்றன.

வீரத்தை புகழ்ந்து பாடிய இலக்கியங்கள் அறத்தை வலியுறுத்தி பாடியிருந்தால் இங்கு அழிவுகள் நடந்திருக்காது – அவலங்கள் நடந்திருக்காது.

ஆனாலும் அழிவுக்கு பின்னராவது, இன்று உருவாகும் கலைக்கூடம் தமிழையும் தர்மத்தையும் வளர்க்க உதவும் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

அகில இலங்கை கம்பன் கழகம் பாரிய இடர்களை சந்தித்த காலம் தொட்டே அவர்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு இருந்திருக்கிறது.

கம்பன் கழகத்தின் சுதந்திரமான செயற்பாடுகள் தடையின்றி தொடர்வதற்கான இந்த சமாதான சூழலை நாம் தொடந்தும் பாதுகாக்க வேண்டும். சுதந்திரமான இலக்கியங்கள் இனியாவது படைக்கப்பட வேண்டும், அவைகள் மக்களை வழிநடத்தி செல்லவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts: