கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு  சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, December 2nd, 2016

கடந்த காலத்தில் அதாவது 1983 அல்லது 1987 ஆண்டுகளிலிருந்து நடந்தேறிய ஊடகவியாளாலர்களின் கொலைகள் உட்பட அனைத்துக் கொலைகள் தொடர்பாகவும் நீதியான விசாரணை வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்திருப்பதையிட்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

‘டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் வட, கிழக்கில் பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அது தொடர்பில் அப்போது நீதியான விசாரணைகளைக் கோரியிருக்காத இவர், இப்போது தற்போது நீதியான விசாரணையைக் கோருவது வேடிக்கையானது’ என்று சுரேஸ்பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே செயலாளர் நாயகம் அவர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், முதுகில் புண் இருப்பவன்தான் காட்டுக்குள் நுழைய பயம்கொள்ள வேண்டும். எனக்கு அப்படி இல்லை. நான் ஒரு அமைச்சராக மட்டுமே இருந்து அக்காலத்தில் நடந்தேறிய பல விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றேன். தமிழ் மக்களின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த போலித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாமும் நீதிகேட்டுப் போராட முன்வரவில்லை. எனது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கவும் முன்வரவில்லை.

அக்கால கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுரேஸ்பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரக் குமார் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இருந்தபோதும் கொலைகளுக்கு எதிராகவும், அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் உணர்வுபூர்வமாக எதையும் செய்யவில்லை. அரசியல் சுய லாபங்களுக்காகவும், ஊடகப் பிரபலத்திற்காகவுமே சில நாடகங்களை அரங்கேற்றினாரகள். பொங்கு தமிழ் நடத்தி தமிழ் மக்களை வீதிக்கு இழுத்தார்கள், மக்களை துன்பத்தில் இழுத்துவிட்டு இவர்கள் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக ஓடினார்கள். நாம் அவ்வாறு செய்யவில்லை. உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் எமது மக்களுடனேயே இருந்தோம்.

இன்று ஊடகவியலாளர்களின் கொலைகள் உட்பட பல கொலைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், அவற்றோடு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் யார்? என்ற உண்மைகளும் வெளியில் தெரியவருகின்றது. அக்கால கட்டத்தில் பல கொலைகளை எம்மீது அரசியல் காரணங்களுக்காக சுமத்தப்பட்டது.

இன்று உண்மையான குற்றவாளிகள் யார்? என்பது தெரியவருவதால் எம்மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதும், அவை எம்மீதான அரசியல் காழ்ப்புனர்வோடு கூறப்பட்டவை என்பதும் நிரூபனமாகி வருகின்றது. எனவேதான் நாம் துணிச்சலாக அனைத்துக் கொலைகளும் நீதியான பொறிமுறையூடாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம்.

கொலைகளை விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றபோது சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன்? அஞ்சுகின்றார் என்று புரியவில்லை. அவர் குற்றங்களோடும், கொலைகளோடும் சம்மந்தப்பட்டிருக்காவிட்டால் அவர் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. ஒருவேளை அவர் இலங்கை, இந்தியப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட காலப்பகுதிகளில் நடைபெற்ற கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை வரலாம் என்று அஞ்சுகின்றாரா? அல்லது மண்டையன் குழு அமைத்து பல தமிழ் இளைஞர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் தாமும் குற்றவாளியாகலாம் என்று அஞ்சுகின்றாரா?

நான் நீதியான விசாரணை வேண்டும் என்று கோரியிருக்கும் கொலைகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் தொடர்புகள் இருக்குமானால், அவர் அந்தக் கொலைகளை விசாரிக்கக் கோரும் எனது நிலைப்பாட்டை விமர்சிக்கலாம், முன்னைய அரசாங்க காலத்தில் நடைபெற்றிருந்தாலும் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை சுரேஸ் பிரேமச்சந்திரன் விமர்சிக்கின்றார் என்றால் அவர் குற்றங்களோடு சம்மந்தப்பட்டிருக்கவேண்டும். அல்லது குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்கின்றாரா? என்ற சந்தேகங்களே எழுகின்றது.

இதேவேளை கஜேந்திரன் குமாரும் எம்மை ஒட்டுக்குழு என்றுகூறியிருக்கின்றார். அவரைப்போல் ஒட்டுண்ணிக் குழுவாக இருந்து தமிழ் மக்களின் இரத்தத்தை உரிஞ்சியவர்கள் வேறு யாருமாக இருக்கமுடியாது. அரசியல் வாழ்வுக்காவும், அரசியல் பதவிகளுக்காகவும் தமிழ் மக்களை தவறான வழியில் நடத்தி தமிழ் மக்களின் இரத்தத்தையும், சதையையும் உரிஞ்சியவர்கள் எம்மைப் பார்த்து ஒட்டுக் குழக்கள் என்று கூறுவதுதான் வேடிக்கையானது.

அன்று பொங்கு தமிழ் நடத்தி மாணவர்களின் கல்வியை கெடுத்தவர்கள், தமிழ் மக்களின் இயல்பு வாழ்வைக் கெடுத்தவர்கள், இன்று தமது நாடாளுமன்றக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக எழுக தமிழ் நடத்தி தமிழர் தாயகத்தில் ஒரு கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தி மீண்டும் தமிழ் மக்களின் இரத்தம் குடிக்க முயற்சிக்கும் ஒட்டுண்ணிக்குழு கஜேந்திரன் குமாருக்கு எம்மை ஒட்டுக்குழு என்று கூறுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது என்றும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

2

Related posts:


எதிர்வரும் ஜுன் 29 இல் முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!