கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு!

Monday, May 31st, 2021

“கொவிட் 19 தடுப்பு மருந்துடன் முன்நோக்கி” எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருவதுடன் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார்.

அரசினால் பொதுமக்களை கொரோனா தொற்றில்  இருந்து பாதுகாக்கும் முகமாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றையதினம் கொரோனா  தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ளஸ் ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொவிட் 19 தடுப்பு மருந்துடன் முன்நோக்கி எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக கோப்பாய்  பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்படடுள்ள கொரோனா தடுப்பூசி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கிருந்த சுகாதாரத் தரப்பினரிடம் நிலைவரங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், பொது மக்களின் அபிப்பிராயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

அதேநேரம் கைதடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும்  கொவிட் தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கும் விஜயம் செய்த  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகளை அவதானித்துள்ளதுடன், மக்களுடன் கலந்துரையாடி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை சங்கானை பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை நேரில் சென்று அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   அங்கிருந்த மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற தற்போதைய அரசாங்கம், நாட்டை முடக்கியுள்ள கொரோனாவை முற்றாக ஒழிக்க தடுப்பூசியை  இறக்குமதி செய்து  வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளதுடன் அனைவரும் தடுப்பூசியை போட்டு நன்மையடைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

000

Related posts:


நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...
எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ...
மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந...