கூட்டமைப்பு வேட்டை நாயோடும் ஓடி, முயலோடும் ஓடுகின்றது!

Saturday, November 12th, 2016

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வொன்றை வழங்குவது எனது பொறுப்பு மட்டுமல்ல, கடப்பாடுமாகுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதை வரவேற்கலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 90 வீதமான தமிழ் மக்கள் தனக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவின் த இந்து பத்திரிகைக்கு வழங்கிய செய்வியிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அதே செவ்வியில் தமிழ் மக்களுக்கு முழுமையான நம்பிக்கையளிக்கக்கூடிய நீதிப் பொறிமுறையை ஏற்படுத்தவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளதுடன், போர்க்குற்ற விசாரணையை ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதுடன், வெளிநாட்டு விசாரணையாளர்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையைத் தனது உரையில் மறுத்திருக்கின்றார்.

ஆனால் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையூடாக போர்க்குற்றத்தையும், மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்வதற்கும்,காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டபிடிப்பதற்கும் சாணக்கியமான பேச்சுவார்த்தைகளின் மூலம் தென் இலங்கைத் தலைமைகளுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும், அதற்காகத் தாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடம் கூறினார்கள்.அதை நம்பியே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.

கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி சர்வதேச விசாரணையாளர்களைக் கொண்ட விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படாவிட்டால், கூட்டமைப்பினரால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். அல்லது தமிழ் மக்களிடம் பொய் சொல்லித்தான் வாக்குகளை அபகரித்துத் தந்துள்ளோம் என்று கூறி ஜனாதிபதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றியிருக்கின்றார்கள்.

ஆகவே கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடமா?அல்லது ஜனாதிபதியிடமா? யாரிடம் உண்மை கூறியிருக்கின்றார்கள் என்பதே கேள்வியாகும்.இதைப் பார்க்கும்போது, வேட்டையில் முயலோடும் ஓடி, வேட்டை நாயோடும் ஓடியது போலவே கூட்டமைப்பினரின் சாணக்கியம் உள்ளது.

ஏன் என்றால் தமிழ் மக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்கிய நம்பிக்கைக்குரிய விசாரணைப் பொறிமுறையே தமக்கு நீதியையும், உரிய பரிகாரத்தையும் பெற்றுத் தரும் என்றே இப்போதும் நம்புகின்றார்கள்.

அவ்வாறில்லாமல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதென்பது தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல், திணிக்கப்படுகின்ற ஒரு தீர்வாகவே அமையும்.

தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததும், இந்த முரண்பாடுகளுக்கும் காரணமானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் என்பதை மறுக்க முடியாது  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

unnamed (2)

Related posts:

போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வல...
தமிழர்களை ஆபத்து வேளையில் கைவிட்ட சர்வதேசம் அரசியல் தீர்வை ஒருபோதும் கொண்டுவராது - அமைச்சர் டக்ளஸ் ...
மட்டக்களப்பு வாகரை களப்பு அபிவிருத்தியில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – துரித நடவடிக்கை எடுப்பது தொடர்பி...

வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மேம்பாடு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!
கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநி...
வடக்கில் செயலிழந்துள்ள பல்வேறு கைத்தொழில் முயற்சிகளை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்...