கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு அவர்களுக்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களும் ஒரு காரணமாக அமைகிறது. அந்தவகையில் மக்கள் விழிப்படைய வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்மராட்சி மண்டுவில் ஐயனார் முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டு முற்றத்தை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்;
யுத்தம் முடிந்து 10 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் மக்களுக்கான தேவைப்பாடுகள் எதையும் இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் பெற்றுக்கொடுக்கமுடியவில்லை.
விடுதலை என்பது வெறுமனே மண்விடுதலையை மட்டுமாக கொண்டதல்ல. அது மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட அனைத்து விதமான உரிமைகளையும் அடக்கியதான பிரச்சினைகளுக்கு வெற்றிகொள்வதற்கானதொன்று. அதற்காகவே நாம் இன்று வரை ஜனநாயக ரீதியில் போராடிவருகின்றோம்.
ஆனாலும் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி மக்களது வாக்குகளை அபகரித்து தமது சுயநலன்களை சாதித்து வருகின்றார்கள் கூட்டமைப்பினர். இதனால் தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் அதன் இலக்குகளை மெய்ப்பிக்க முடியாதநிலையில் போய்விட்டன.
ஆனால் நாம் கூறும் விடுதலை என்பது மெய்ப்பிக்க கூடியது. யதார்த்த ரீதியில் பெற்றுக் கொள்ளக் கூடியது. ஊருக்கு உபதேசம் செய்து விட்டு சுயநலமாகச் செயற்படுபவர்கள் நாமல்ல.
அந்தவகையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி வாக்களிப்பதே காரணமாக அமைகின்றது. எனவே ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதைப் போல் இனிவரும் காலங்களில் எமது மக்கள் தெளிவான ஒரு நிலைப்பாட்டை அடைந்து தமிழ்மக்களுக்கான அபிலாசைகளை வெற்றி கொள்ளத் தயாராக வேண்டும்
அதற்காக உழைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|