கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவருகின்றது – டக்ளஸ் தேவானந்தா

இணக்க அரசியலினூடாக தனிமனித பதவிகளையும், அரசியல் சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்றுவித்தை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் செயலகத்தில் நேற்றையதினம் முக்கிய தமிழ் பிரமுகர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகாலங்களில் நாம் இணக்க அரசியலை முன்னெடுத்தபோது அதைக் குறைகூறியும், எள்ளிநகையாடியும் வந்த கூட்டமைப்பினர் இன்று எமது பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய சூழலில் இணக்க அரசியலை முன்னெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பலத்தசந்தேகம் தோற்றுவிக்கப்பட்டுள்ள அதேவேளை எந்தவொரு விடயத்தையேனும் மக்களுக்கு அவர்கள் உண்மையோடும் வெளிப்படைத் தன்மையோடும் தெரிவிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
தேர்தல் காலங்களில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு எமக்கு ஆதரவு தாருங்கள் என்றும், எமது ஒற்றுமையை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவோம் என்றும் பலவாறான வெற்றுக் கோஷங்களையும் உணர்ச்சிப் பேச்சுக்களையும் பேசி தேர்தல் வெற்றிகளைத் தமதாக்கிக் கொள்கின்றனர்.
இவ்வாறு தேர்தல் வெற்றிகளைத் தமதாக்கிக் கொள்ளும் கூட்டமைப்பினர் தற்போது இணக்க அரசியலை முன்னெடுத்து வருவதுடன் அதனூடாக தனிமனித பதவிகளையும் அரசியல் சுகபோகங்களையும் தாம் மட்டும் அனுபவித்துக்கொண்டு தம்மைவெற்றிபெறச் செய்த மக்களை நிர்க்கதியாக்கியுள்ள அதேவேளை மக்களது வாழ்வாதாரத்தையோ பொருளாதாரத்தையோ மேம்படுத்துவதிலோ அல்லது வளர்த்தெடுப்பதிலோ எவ்வித அக்கறையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
தேர்தல் மேடைகளில் மட்டும் வீராவேசப் பேச்சுக்களைப் பேசி மக்களை உசுப்பேற்றி மக்களின் வாக்குகளை அபகரித்துக்கொள்ளும் கூட்டமைப்பினர் எமது மக்கள் இடர்பாடுகளையும் துன்பங்களையும் சந்திக்கும் வேளைகளில் பாராமுகமாக இருக்கின்றமையானது வேதனையளிக்கும் விடயமாகும்.
இந்நிலையில், மக்கள் கூட்டமைப்பினரின் வெற்றுக் கோஷங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் நம்பி தாம் ஏமாற்றப்பட்டுவருகின்றோம் என்பதை தற்போது தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள் என்றும் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக கட்சியின் மீது திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய அதேவேளை, அவற்றின் பின்னணியில் இருக்கக்கூடியதான அரசியல் உள்நோக்கம் மற்றும் சதித்திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே கொழும்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நேற்றுக் காலை இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இந்த புதிய அரசு பூர்த்திசெய்யும் எனதான் நம்புவதாகவும் அதற்கு ஐக்கிய நாடுகள் சபை பக்கபலமாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.
Related posts:
|
|