குற்றவாளிகளை பாதுகாக்கிறது வடக்கு மாகாணசபை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, June 19th, 2018

வடக்கு மாகாண சபையில் ஏற்கனவே நியமனம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மேசடிக் குற்றச்சாட்டுகள் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரால் ஒரு விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டு, அந்த நான்கு அமைச்சர்களும் பதவி நீக்கம்; செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் தொடர்பில் வேறு சட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க கணக்குகள் தொடர்பிலான கணக்குகள் பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மேற்படி நான்கு அமைச்சர்களினதும் அமைச்சுக்கள் போக, வடக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் இருக்கின்ற அமைச்சுகள் தொடர்பிலும், ஊழல், மோசடிக் குற்றச்சாட்டகள் முன்வைக்கப்பட்டன. எனினும் அவை தொடர்பில் எவ்விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய நிலைமையின் மத்தியில் தற்போது வடக்கு மாகாணத்தில் நியமனம் பெற்றிருக்கின்ற கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராகவும், ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதே போன்று கடந்த காலத்தில் ‘நெல்சிப்’ உதவித் திட்டத்தில் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்றிருந்த மோசடிகள் தொடர்பில் இதுவரையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் வடக்கு மாகாண சபை விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்பட்டிருந்த நிலையிலும், அது குறித்து எவ்விதமான தகவல்களும் இல்லாத நிலையில், அது குற்றவாளிகளைக் காப்பாற்றுகின்ற ஒரு தந்திரோபாயம் என்றே கருதப்பட வேண்டியுள்ளது.

எனவே, எமது மக்களுக்கான நிதி – எமது மக்களின் நிதி – இவ்வாறு முறைகேடுகளுக்கு ஒரு சில நபர்களால் உட்படுத்தப்படுகின்ற நிலையில், அவை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். நடந்து முடிந்தவை தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அத்தகைய தவறுகள் நடக்காதிருப்பதற்கும் வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

1549537_198225150384809_765951259_n copy

 

Related posts:

குடாநாட்டில் அதிகரித்துவரும் தொழிலின்மைப் பிரச்சினையே சமூக சீர்கேடுகளுக்கான பிரதான காரணமாக விளங்குகி...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...
நியமனங்களை பெற்றுத்தர ஆவன செய்யுங்கள் - உடற்கல்வி டிப்ளோமா மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...