குற்றவாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் நிலையான சட்டங்கள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, January 11th, 2019

ஒரு குற்றத்தில் ஈடுபட்டு, நாட்டைவிட்டுத் தப்பியோடி வேறொரு நாட்டில் மறைந்திருக்கின்ற ஒரு நபரை கைது செய்து கொண்டுவந்து, அவருக்கு சட்ட ரீதியிலான தண்டனை கொடுப்பதற்கு இந்த மீள ஒப்படைத்தல் சட்டம் வாய்ப்பினை வழங்குகின்றது.

இந்த வாய்ப்பு மீள ஒப்படைத்தல் ஒப்பந்தத்தினை செய்து கொள்கின்ற இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுகின்றது.இது ஒரு நல்ல ஏற்பாடு என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. இதன் மூலமாக நாடுகளுக்கிடையில் பரஸ்பர நல்லிணக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 1977ஆம் அண்டின் 8ஆம் இலக்க மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆனால், இந்த ஒப்பந்தத்தினை தற்போதைய நிலையில் நாம் செய்து கொள்ள வேண்டிய சில முக்கியமான நாடுகளும் இருக்கின்றன.

இந்த நாட்டுக்கு மிக மோசமான நிலைமையினை ஏற்படுத்தியவர்கள். ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறி, மறைந்து கொண்டிருக்கின்ற நாடுகளுடன் மீள ஒப்படைத்தல் ஒப்பந்தங்களை இந்த நாடு மிக விரைவாக செய்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது இந்த நாட்டை பொருளாதார ரீதியில் மிக மோசமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் அடிக்கடிக் கூறி வருகிறீர்கள்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் முதலாவது சந்தேக நபர் அதனது முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் என பெயர் குறிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி சர்வதேச பொலிஸ் சிகப்பு பிடிவிறாந்து விடுத்திருந்தது. இருந்தும் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருக்கின்ற வரையில் சர்வதேச பொலிஸாரினால் அவரைக் கைது செய்ய முடியாது.

ஏனெனில், சிங்கப்பூருக்கும், சர்வதேச பொலிஸாருக்கும் இடையில் எவ்விதமான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படாத நிலையில் இது சாத்தியமில்லை என்றே தெரிய வருகின்றது.

இதே நிலையே மெக்சிக்கோ, நைஜீரியா போன்ற நாடுகளில் நிலவுகின்றன. இந்த நாடுகளுக்கும், சர்வதேச பொலிஸாருக்கும் இடையில் எவ்விதமான ஒப்பந்தங்களும் இல்லை.

இந்த நிலையில்தான் இந்த மீள ஒப்படைத்தல் சட்டமானது முதன்மை பெறுகின்றது என்றே கூற வேண்டும்.

ஆகவே இந்த நாடு சிங்கப்பூருடனும் இந்த மீள ஒப்படைத்தல் ஒப்பந்தத்தை செய்து கொள்ளுமானால், அர்ஜூன் மகேந்திரனைக் கைது செய்து கொண்டுவர முடியும்.

சிங்கப்பூருடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு இந்த நாட்டுக்கு அவ்வளவு சிரமம் இருக்குமென நான் நம்பவில்லை. ஏனெனில் இந்த இரு நாடுகளும் பொதுநலவாய நாடுகள் சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இத்தகைய நிலையில் சிங்கப்பூருடன் மீள் ஒப்பந்தமொன்றினை செய்து கொள்வதற்கு ஏன் இன்னும் நீங்கள் தயாராக இல்லை? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அதேபோன்று டுபாய் – ஐக்கிய அமீர் ராஜ்ஜியம்.  இந்த நாட்டுடனும் மீள ஒப்பந்தம் செய்வது பற்றி நீங்கள் யோசிப்பது இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதென்றே கருதுகின்றேன்.

Related posts: