குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களை காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது!

Wednesday, March 7th, 2018

காணாமற்போனோர் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களையும், காhணமற் போகச் செய்தல் தொடர்பில் பக்கச்சார்புடன் செயற்படுகின்றவர்களையும் காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தப்படக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலுக்கட்டாயமாகக் காணாமற் போக்கப்படுதலில் இருந்து எல்லா ஆட்களையும், பாதுகாத்தல், பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் தொடர்டபில் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

காணாமற்போனோர் அலுவலக உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் காணாமற்போனோரது உறவுகளிடத்தேயும்;, சில சிங்கள தரப்பினரிடையேயும் எதிர்ப்பு நிலை காணப்படுகின்றது. மேற்படி உறுப்பினர்கள் தெரிவானது ‘இராணுவத்தையும், இந்த நாட்டையும் காட்டிக் கொடுக்கும் ஏற்பாடு’ என சில சிங்களத் தரப்பினர் கூறுகின்றனர். அதே நேரம், ‘காணாமற்போனோர் தொடர்பான அலுவலகமானது காலங் கடத்தும் செயற்பாடே அன்றி, அதனால் எங்களுக்கு எவ்விதமான தீர்வுகளும் கிட்டாது’ என காணாமற்போனோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் எமது மக்கள் சார்ந்து எழுந்திருந்த பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்பட்டிருக்கவில்லை. ஒரு பிரச்சினையுடன் இன்னொரு பிரச்சினை, இன்னொரு பிரச்சினையுடன் மேலுமொரு பிரச்சினை என பிரச்சினைகள் நாளுக்கு நாள் பெருகி, வளர்ந்து, ஓர் இடத்தில் தேங்கிக் கிடந்த நிலைமையிலேயே ‘இந்தப் பிரச்சினைகளுகெல்லாம் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவார்கள்’ என வாக்குறுதியளித்து இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

ஆனாலும், இன்று வரையில் எமது மக்களது பிரச்சினைகள் எதுவுமே தீர்ந்ததாக இல்லை. மேலும், வேறு பல பிரச்சினைகளும் பெருகி, நாடே பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

காணாமற் போனவர்களைக் கண்டறிதல் என்பது வெறும் தகவல்களைப் பெறுதல் என்பதல்ல. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயங்கள் கிடைக்க வேண்டும். பரிகாரங்கள் கிட்ட வேண்டும். இவை அனைத்துமே இந்த நாட்டில் மீண்டுமொரு இன ரீதியிலான பிரிவுகளுக்கு வித்திடாமல், தேசிய நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: