குருநகர் மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்த கோரிக்கை!

Saturday, June 15th, 2019

கடந்த 35 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் குடியிருப்பு நிலங்களை அத்துமீறிய குடியிருப்பு என்று கூறி தங்களை தமது வாழிடங்களிலிருந்து வெளியேற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனால் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதால் இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தந்து தமது எதிர்காலத்தை காப்பாற்ற வழிவகை செய்து தருமாறும் யாழ் மாநகருக்குட்பட்ட ஐந்து மாடி குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதி, இறால் வளர்ப்பு திட்ட குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்த குறித்த பகுதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

தமது பகுதியில் குறிப்பாக ஐந்து மாடிக் குடியிருப்பில் 140 குடும்பங்களும் இறால் வளர்ப்பு பகுதியில் 52 குடும்பங்களுமாக 192 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். ஆனாலும் இப்பகுதியில் வாழ்பவர்களின் பதிவுகளின் பிரகாரம் 244 குடும்பங்கள் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் இந்த மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற எந்தவிதமான உதவி திட்டங்களும் கிடைப்பதில்லை. குறிப்பாக மலசல கூடங்கள் வீட்டுத் திட்டங்களில் காணி உறுதி இன்மையை காரணம் காட்டி புறக்கணிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது.

அதுமாத்திரமல்லாது இப்பகுதிகளை சேர்ந்த 22 குடும்பங்களுக்கு இதுவரை குடும்ப பதிவுளைக் கூட அதிகாரிகள் பதியப்படாத நிலையில் இருப்பதாகவும் 44 குடும்பங்களுக்கு காணி உரிமம் இன்றிய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.

குறித்த பகுதி மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்திய  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்பினருடன் பேசி தீர்வுகளை காலக்கிரமத்தில் பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்தார்.

Related posts:

ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி - இதுவே நாட்டின் இன்றைய நிலை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச...