குரங்கின் கை பூமாலை பிணத்துக்குக் கூட உதவாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, August 24th, 2018

வடக்கு மாகாண சபையானது, அதன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு பள்ளிக்கூடமாக அல்லாமல் வெறும் பல்லவிக் கூடமாகவும், மக்கள் நல சேவைத் தளமாக அல்லாமல் – மக்கள் விரோத வேலைத் தளமாகவும் மாறிவிட்டதே என்பதுதான் எமக்கு வேதனையாக இருக்கின்றது. குரங்கின் கைகளில் கிடைத்த பூமாலையை பிணத்துக்குக் கூட பயன்படுத்த முடியாது என்ற நிலையே வடக்கு மாகாண சபையால் எமது மக்களுக்கு இன்று ஏற்பட்டு விட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகள் நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மாகாண சபை முறைமையானது காலங்கடந்தது என்றும், உளுத்துப் போனது என்றும் அதனைத் தும்புத் தடியால்கூட தொட்டும் பார்க்க மாட்டோம் என ஆரம்பத்தில் கூறியவர்கள், மாகாண சபைக்கான தேர்தல்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்டிருந்த காலகட்டங்களில், மாகாண சபைகள் பற்றிய அவர்களது காலங்கடந்ததும், உளுத்துப் போனதுமான கொள்கைகளை தும்புத் தடியால் துடைத்துவிட்டு, ஓடி வந்து போட்டிப்போட்டார்கள்.
அவ்வாறு இவர்கள் போட்டியிட்டபோது, மாகாண சபையின் மூலமாக எமது மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என்றோ, அதிலே அதிகாரங்கள் இல்லை என்றோ, தொழில்வாய்ப்புகளை எமது மக்களுக்கு வழங்க முடியாது என்றோ கூறவில்லை. இன்று நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையின் ஊடாக எமது மக்களுக்கு என்னென்ன விடயங்களை செய்ய முடியும் என்பது அவர்களுக்கு அப்போதும் தெரிந்தே இருந்தது.
சட்ட விற்பண்ணர்களும், சட்டத்தரணிகளும், கல்வி மேதைகளும், விரிவுரையாளர்களும், அரசியல் நிபுணர்களும், அறிவுஜீவிகளுமாக இருககின்ற இவர்களுக்கு இந்த நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையில் என்ன இருக்கின்றது என்பது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் சிறு குழந்தைகள்கூட அதனை ஏற்றுக் கொள்ளாது.
எனவே, இவர்களுக்குத் தெரியும். தெரிந்துதான் இவர்கள் எமது மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார்கள். எமது மக்களின் அனைத்தப் பிரச்சினைகளையும் தீர்ப்பதாக இவர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள். மாகாண சபையால் தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தாங்கள் மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றினால் தீர்ப்போம் என வாக்குறுதி வழங்கினார்கள். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டினார்கள். தேரதலில் வென்றார்கள். மாகாண சபையின் ஊடாக செய்ய முடிந்த மக்கள் நலப் பணிகளைக்கூட தங்களது சுயலாப அரசியலுக்காக செய்யாது, இன்று எமது மக்களை நடுத் தெருவில் கைவிட்டுள்ளார்கள்.
பதவி மற்றும் அரச சலுகைகள் மீது ஆசைப்பட்டு மாத்திரமே மாகாண சபையினை கைப்பற்றிய இவர்கள், அதிகாரங்கள் இல்லை என்று கூறிக் கொண்டே, அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு, அதற்கெதிராக அவர்களுக்குள்ளேயே விசாரணைகளையும் வைத்துக் கொண்டு, விசாரணைகளின் முடிவுகளை தங்களுக்குள்ளேயே பதுக்கிக் கொண்டார்கள்.
மக்கள் நலன்கள் சார்ந்து எந்தவொரு திட்டம் பற்றிக் கேட்டாலும், அதற்கு நிதியில்லை என்று கூறிக்கொண்டே மத்திய அரசிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் தங்களுக்கான நிதியை எடுத்துக் கொண்டும், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டும், அது குறித்து அவர்களுக்குள்ளேயே முறைப்பட்டுக் கொண்டும், மக்களுக்கான நிதியைத் திருப்பி திறைசேரிக்கே அனுப்பினார்கள்.
முடிவாக மாகாண சபையில் ஒன்றுமே இல்லை என்று இன்று கூறுகின்ற இவர்கள், தங்களது பதவிகளை விட்டும் விலகாமல், அடுத்தமுறையும் இதே மாகாண சபையின் பதவிகளுக்கு வருவதற்காக சுயம்வரம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

Related posts:


கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பே...
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது - அமைச்சர் தேவா நம்பிக்கை!