குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா! 

Friday, May 12th, 2017

எமது நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்ந்துவரும் நிலையில் எவரும் தமக்கு விரும்பிய பகுதிகளில் வாழ்வதற்கு உரிமையுண்டு. இதனை எவரும் மறுக்க முடியாது. ஆனால், ஓர் இன சமூகத்தினர் பரம்பலாக வாழும் நிலையில் அப்பகுதிகளை ஆக்கிரமிக்கக்கூடிய வகையில் இன்னொரு இன சமூகத்தினரை வலிந்து குடியேற்றும் திட்டங்களையே நாம் எதிர்க்கின்றோம். அதேபோன்று குறிப்பிட்ட ஒரு பகுதியில் குறிப்பிட்ட ஒரு மதத்தினை வழிபடுகின்ற மக்கள் இல்லாத நிலையில் அந்த மதத்திற்குரிய வழிபாட்டுத் ஸ்தலங்கள் வலிந்து புகுத்தப்படுவதையும் நாம் எதிர்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சில காலமாகவே வழிபாட்டுத் ஸ்தலங்கள் மற்றும் சிலை வைப்புச் சம்பவங்கள் என்பன வலிந்து புகுத்தப்படுகின்றதொரு நிலையில், எமது மக்களிடையே பல்வேறு வகையிலான பிரச்சினைகள் தோன்றி வருகின்றன. ஒரு மதத்தினை வழிபடக்கூடிய மக்கள் இருக்கின்ற நிலையில் அம்மதத்திற்குரிய வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்கப்படுவதில் எவ்விதமான தவறும் இல்லை. ஆனால், வழிபடக்கூடிய மக்களே இல்லாத இடங்களிலெல்லாம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளவதென்பது இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கோ அதனூடாக தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கோ உகந்த செயலாகாது.

தென் பகுதியிலே இந்து மக்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் இருக்கின்றன. அம் மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் வடக்கில் எமது வழிபாட்டு ஸ்தலங்களை ஏன் அமைக்க முடியாது? என்றொரு வாதத்தை இன்று பெரும்பான்மை தரப்பில் சிலர் முன்வைக்கின்றர். இது ஒரு வாதமே அன்றி இது யதார்த்தமானதொரு கூற்று அல்ல. தென் பகுதியில் பரவலாக இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதே நேரம், தென் பகுதியில் இந்து மக்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் பெரும்பான்மை இன மக்களாலும் வழிபாடுகளுக்கென பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அவை தொடர்பில் பெரும்பான்மையினருக்கு மத ரீதியாக ஒரு பிரச்சினையில்லை. ஆனால், முஸ்லிம் மக்களது வழிபாட்டு ஸ்தலங்கள் பெரும்பான்மையினரின் தாக்குதல்களுக்கு உட்படுகின்ற நிலைகளை தென் பகுதியிலே காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அதன் பாதிப்பானது ஒட்டு மொத்தமாக எமது நாட்டின் முன்னேற்றத்தையே தாக்கக்கூடியதாக அமைந்திருப்பதை உரிய தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, தேசிய நல்லிணக்கம் கருதியதான செயற்பாடுகளுக்கு இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் சுமுகமானதொரு சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் இவ்வாறான மத வழிபாட்டு ஸ்தலங்களை வலிந்து புகுத்துகின்ற நிலைமைகள் அனைத்து இன சமூகங்காளலும் தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

நலிவுற்ற மக்களது வாழ்வியலையும் மேம்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா- ஊரெழு மக்கள் சுட்டிக்காட்டு!
வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈ...

சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று  அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...
மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா ...