குடிநீர் வசதியைப் பெற்றுத்தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் புதுமாத்தளன் மக்கள் கோரிக்கை.

குடிநீருக்காக நீண்டகாலமாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருமாறு புதுமாத்தளன் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு பகுதிக்கான விஜயத்தின் ஒரு அங்கமாக புதுமாத்தளன் பகுதியில் நடைபெற்ற மக்களது குறைகேள் அமரவொன்றில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடமே குறித்த பகுதி மக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் – யுத்தம் முடிந்து தாம் 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டும் தமக்குரிய நிரந்தர குடிநீர்ப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதுவும் இன்றுவரை பூர்தித் செய்து தரப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர்கள் தமது பகுதிக்கான குடிநீர்ப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு நீண்டகாலமாக துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கைகள் பல முன்வைத்திருந்தும் பலன் கிடைக்கவில்லை என டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது தமது பகுதிக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரிடமும் குறித்த விடயம் தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்ததாகவும் ஆனால் இதுவரை அவரும் தமது அவல நிலை குறித்து செவிசாய்க்கவில்லை எனவும் தெரிவித்த மக்கள் துறைசார் அதிகாரிகள் மற்றும் குறித்த பகுதிக்கான அரசியல் பிரதிநிதிகளின் அசமந்தப்போக்கே தாம் இதுவரை காலமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமைக்கு காரணமாக உள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
வடமாகாணத்தின் ஒரு அங்கமான யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அதிகளவான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்துள்ள உங்களால் எமது பகுதிக்கான குடிநீர் பிரச்சினைக்கும் நிரந்தரமான தீர்வை பெற்றுதரமுடியும் என்ற நம்பிக்கை தமக்கு முழுமையாக உள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
குறித்த பகுதி மக்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, துறைசார் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கூடியவிரைவில் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|