கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது – இரு தரப்பு சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதெரிவிப்பு!

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவரும் நீங்கள், வடக்கின் முதலமைச்சராக வந்தால் அதை முதலில் வரவேற்பவர்களாக நாங்கள் இருப்போம் என்று கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கடந்த 31.07.2018 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் செயலாளர் நாயகத்தை சந்தித்து கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
கிழக்குத் தமிழர் ஒன்றியமானது, கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவும், அதன் ஊடாக நியாயமாக கிழக்கில் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ளவுமே பொதுவான வேலைத்திட்டத்தை வரித்துக்கொண்டு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளோடும், பொது உடன்பாட்டுக்கான கலந்துரையாடல்களை நடத்திவருகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினர்.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் குழுவினர் மத்தியில் உரையாற்றிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நோக்கமும், முயற்சிகளும், வரவேற்கத்தக்கவை, இவ்வாறான முயற்சிகளை ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தியேனும் இந்த முயற்சி எடுக்கப்படுவதை வரவேற்கும் அதேவேளை கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பொது வேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது பங்களிப்பை நிச்சயமாக வழங்கும் என்று தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கில் செயற்திறனான முதலமைச்சர் ஒருவர் தலைமையேற்று கிழக்கில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமற்று சேவையாற்றும் சூழல் அமைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.அத்தகைய சூழலில் கிழக்கின் வளங்களை பெருக்கவும், பொருளாதாரரீதியாக கிழக்கு மாகாணமக்களின் வாழ்வை தூக்கிநிறுத்தவும் தேவையான வழிகாட்டலையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிசெய்யும் என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும், பொதுக்கூட்டு ஒன்றை அமைத்து, மாகாணசபை அதிகாரங்களை எவ்வாறு அர்த்த முள்ளவகையில் மக்களுக்கு பயனுள்ளதாக செயற்படுத்துவது என்பது தொடர்பாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குழுவினருக்கும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவினருக்குமிடையே விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
Related posts:
|
|