கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, November 5th, 2020

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தடங்கலுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை , கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் இது விடயம் தொடர்பாக மாவட்டப் பொறியியலாளர் சாரங்கனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து குடிநீர் விநியோகத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குடிநீர் வழங்கல் கட்டமைப்புக்கான நீர் சுத்திகரிப்புத் தொகுதியில் காணப்படும் குறைபாடுகளே இதற்கான பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, இதனை நிவர்த்திசெய்து அதனைப் புத்தாக்கம் செய்வதற்கான கோரிக்கையை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, இதற்குரிய உடனடி நடவடிக்கைக்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயகார, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே கிளிநொச்சி குளத்திலிருந்து பெறும் நீரைச் சுத்தீகரித்து கிளிநொச்சி, பரந்தன் மற்றும் பூநகரி பகுதியில் அமைந்துள்ள நீர் தாங்கிகள் ஊடாக இந்த குடிநீர் விநியோகம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்சமயம் சுமார் 2,000 குழாய் இணைப்புக்கள் மூலம் 8,000 பேருக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் தெரிவித்தார். 

ஆனால், கிளிநொச்சிக் குளத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரதான நீர் சுத்தீகரிப்புத் தொகுதியில் ஏற்பட்டிருக்கும் பழுதுகள் காரணமாக நாளாந்தம் சுத்தீகரிக்கப்படும் நீரின் அளவு குறைந்தமையால் கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் அண்மைக்காலமாக தடங்கல்களைச் சந்தித்து வருவதாக, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் இணைப்பாளர் வை.தவநாதனிடம் அவர் தெரிவித்தார்.

நாளாந்தம் சுமார் 3,800 சதுர மீற்றர் அளவு தண்ணீரைச் சுத்தீகரிக்கும் கொள்ளளவுடைய இந்தச் சுத்தீரிப்புப் பொறிமுறை சீராகச் செயற்படாத காரணத்தினால், நாளாந்தம் 500 சதுர மீற்றரை சுத்தீகரிக்கக்கூடிய தற்காலிக சுத்தீகரிப்புப் பொறிமுறை மூலமே இப்போது பிரதானமாக நீர் சுத்தீகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக, நாளாந்த விநியோகத்துக்குத் தேவையான குறைந்தபட்சம் 2,000 சதுரமீற்றர் தண்ணீரை சுத்தீகரிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே குடிநீர் விநியோகம் அண்மைக் காலமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

தற்காலிக சுத்தீகரிப்புப் பொறிமுறை மூலம் சுத்தீகரிக்கப்படும் நீரில் அளவு குறைவாக இருக்கின்ற காரணத்தினால், நீர்த் தாங்கிகளில் நீர் மட்டமும் குறைவாக இருப்பதாகவும், இதன் காரணமாக நீர் அழுத்தம் குறைந்து மேட்டுநிலப் பகுதிகளுக்கும், தூர இடங்களுக்கும் நீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யுத்த அழிவை தடுத்து நிறுத்த கூட்டமைப்பின் தலைமை விரும்பியிருக்கவில்லை - சபையில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
எண்ணை ஆய்வுகளாலும் இராணுவ ஒத்திகைகளாலும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - டக்ளஸ் எம்....
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள்!

முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்! டக்ளஸ் தேவான...
கேப்பாபுலவு மக்களுக்கு ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை - சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
தனங்கிளப்பில்இறால் வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!