கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தமை வரவேற்கத்தக்கது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, November 8th, 2020

யாழ்ப்பாணம் கிளிநெச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை வரவேற்கத்தக்க  ஒரு விடயம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களிடம் தனிப்பட்ட சுயநலன்கள் இருந்தாலும் இதனூடாக அவர்கள் கடந்தகாலங்களில் தாம் செய்த தவறுகளை ஓரளவேனும் உணர்ந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய முன்னணி ஆகியோர் பங்கெடுத்திருந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் அரசாங்கம் கொண்டுவந்திருந்த பல்வேறு நலத்திட்டங்கள் சார்ந்த இவ்வாறான சந்தர்ப்பங்களை எல்லாம்  தவறவிட்ட தமிழ் தேசியவாத தமிழ் தரப்பினர் இன்று குறித்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனூடாக பல விடயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

அத்துடன் எமது மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வகளையும் இலகுவாக பெற்றுக்கொள்ள வாய்ப்பும் கிடைக்கின்றது.

அந்தவகையில் அவர்கள் கடந்தகாலங்களில் தாம் செய்த தவறுகளை ஓரளவேனும் உணர்ந்துள்ளனர் என்றே கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: