கித்துள் கள்ளினை வீடு வீடாக விற்பனை செய்து வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்டா?

Friday, March 23rd, 2018

கித்துள் கள்ளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கித்துள் கள்ளுக்கென நாட்டில் எங்குமே தவறனைகள் கிடையாது எனத் தெரிய வருகின்றது. எனவே, போதையற்ற நாடாக இந்த நாட்டை மாற்றப் போவதாகக் கூறிக் கொண்டு, கித்துள் கள்ளினை வீடு, வீடாக விற்பனை செய்து, வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்டா? எனக் கேட்க விரும்புகின்றேன். அதாவது, கித்துள் கள் உற்பத்தியானது குடிசைக் கைத்தொழிலாக ஆக்கப்படுகின்றதா?; என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் மதுவரி தொடர்பிலான விஷேட சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

தற்போதைய நிலையில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் சட்டவிரோத மது உற்பத்தியானது அதிகரித்து, இதனால் எற்படுகின்ற சமூக சீர்கேடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றன.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், பனை மற்றும் தென்னை மரங்களே பிரதான கள் உற்பத்தி மரங்களாகக் காணப்படுகின்றன. கித்துள் மரம் என்பது ஒரு காலத்தில் தென் பகுதி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் கள் இறக்குவதற்குத் தடை செய்யப்பட்ட மரமாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது.

நான் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில், கித்துள் சார்ந்த தொழிற்துறையும் எனது அமைச்சின் கீழ் இருந்ததன் காரணத்தினால், கித்துள் பாணி மற்றும் கருப்பட்டி உற்பத்தித்துறையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, கித்துள் மரங்களில் சீவல் தொழிலில் ஈடுபடுகின்றவர்களை காவல்த்துறையினர் கைது செய்வதாக அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்த நிலையில், உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி, அத் தடையினை நாம் நீக்கி இருந்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: