காணி நிலங்களை விடுவிக்கக் கோரும் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்!

Wednesday, February 22nd, 2017

ஒரு கை ஒருபோதும் ஓசை தராது. இரு கைகள் இணையும்போதுதான் ஓசையும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆகவே இலங்கைத்தீவில் தேசிய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டுமேயானால் சம்பந்தப்பட்ட இருசாராரும் ஒரு புள்ளியில் ஒருமித்துச் செயற்பட வேண்டும். தேசிய நல்லிணக்கம் இல்லாத சர்வதேச கடப்பாடுகள்  வெறும் பானையை உலையேற்றி எரிப்பதற்கு சமனானதாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகள் பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்று பல்வேறு பிரச்சினைகள் எமது நாட்டில் அன்றாடம் தலைதூக்கியுள்ளன. கொழும்பு நகரை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என தொடர்வதையே நாம் காண்கின்றோம். இந்த அத்தனை பிரச்சினைக்கும் மேலாக மிகவும் பிரதான பிரச்சினையாக பொருளாதாரப் பிரச்சினை உருவெடுத்திருக்கிறது.

அந்த வகையில், ஏனைய அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய பிரதான பிரச்சினை என்ற வடிவத்தையும் இந்த பொருளாதாரப் பிரச்சினையே கொண்டிருப்பதை உணரமுடிகின்றது.

எனவே, இந்த நாட்டில்; கூர்மையடைந்திருக்கும் பிரச்சினையாகக் கருதப்பட்டு வருகின்ற தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு கூட இன்று பின்தள்ளப்பட்டுள்ள நிலையையே காணப்படுகின்றது.

பொருளாதார பிரச்சினையை நாம் தீர்த்துக் கொண்டாலும், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது என்பது இன்னும் சிக்கல் நிறைந்த நிலையிலேயே காணப்படுகின்றதே அன்றி, பல்வேறு முயற்சிகள் அது தொடர்பில் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், அதற்குரிய இலகுத்தன்மையானது இன்னும் எட்டப்படாததாகவே இருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில்தான் நாங்கள் எமது நாட்டின் சர்வதேச கடப்பாடுகள் குறித்து வாதப் பிரதிவாதங்களை நடத்தியும் கொண்டிருக்கின்றோம்.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது இந்த நாட்டில் பல ஆண்டு காலமாகவே புறையோடிப் போயிருக்கின்ற ஒரு பிரச்சினை என்பதை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறானதொரு பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும் எனக் கூறிக்கொண்டே இறுதிவரையில் தீர்க்காமலேயே இருந்துவிட்டோம்.

இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக தமிழ் – சிங்களத் தரப்புகளைச் சேர்ந்த சுயலாப அரசியல்வாதிகளே பிரதானமாவர்களாக இருக்கின்றனரே அன்றி, இந்த நாட்டு மக்கள் அல்ல.

1994 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களால் மிகச் சிறந்த அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தீர்வை எதிர்த்த தமிழ் தரப்பினர் இன்று அரசாங்கத்தில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்ததை நான் இங்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

வழமைபோன்ற எதிர்க்கட்சி ஆழும் கட்சிப் பிரச்சினையால் அந்தத் தீர்வு முயற்சி தோல்வியில் முடிவடைந்திருந்தாலும்  தமிழர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஏன் அந்த தோல்விக்கு துணைபோனார்கள் என்பதைத்தான் நான் இங்கு கேட்க விரும்பகின்றேன்.

காலம்;சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நீலன்; திருச்செல்வம் அவர்கள் நல்லவர் வல்லவர், அறிவு சார்ந்தவர் என்றெல்லாம் இந்த சபையில் இன்று புகழாரம் சூட்டப்படுகின்றார்.

இவ்வாறான வல்லமை உடைய சட்ட நிபுணர் நீலம் திருச்செல்வம் அவரது பெரும் பங்களிப்பில் உருவான 1994 தீர்வுத்திட்டமும் சிறந்த ஒரு தீர்வு என்று சம்பந்தன் அவர்கள்  எற்றுக்கொள்வார்களா?

அவ்வாறு ஏற்றுக்கொள்பவர்களாக இருந்தால் அன்று அந்த தீர்வு முயற்சிக்கு எதிராக ஏன் செயல்ப்பட்டார்கள் என்பதையே நான் இந்த சபையில் கேள்வியாக கேட்கின்றேன்.

அரசியல் தீர்வக்காகவும் தேசிய நல்லிணக்கத்திற்காகவும் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தவறவிட்டவர்கள் இன்று சாத்தான்கள் வெதம் ஓதவது போல் தமிழ் பேசும் மக்களது அரசியல் உரிமைக்காக வேதம் ஓதிக்கொண்டிருக்கின்றார்கள்

சர்வதேச கடப்பாடுகள் குறித்து நாம் அவதானங்களை செலுத்தி வருகின்றோமே அன்றி ஒரு சந்தர்ப்பத்திலாவது தேசிய கடப்பாடுகள் என்ன என்பது குறித்து சிந்தித்துப் பார்ப்பதில் தவறிழைத்து வருகின்றோம். தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளையும் தேசிய ரீதியிலான கடப்பாடுகளையும் நாம் உரிய முறையில் வளர்த்தெடுக்காவிட்டால் சர்வதேச கடப்பாடுகள் குறித்த எந்தச் செயற்பாடுகளும் எமக்கு விமோசனங்களை தரப்போவதில்லை.

ஒரு கை ஒருபோதும் ஓசை தராது. இரு கைகள் இணையும்போதுதான் ஓசையும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

ஆகவே இலங்கைத்தீவில் தேசிய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டுமேயானால் சம்பந்தப்பட்ட இருசாராரும் ஒரு புள்ளியில் ஒருமித்துச் செயற்பட வேண்டும்.

தேசிய நல்லிணக்கம் இல்லாத சர்வதேச கடப்பாடுகள் வெறும் பானையை அடுப்பேற்றி எரிப்பதற்கு சமனானதாகும்.

அந்த வகையில், இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களினதும் அனைத்து உரிமைகள் உட்பட்ட அந்தந்த மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையிலான ஏற்பாடுகளை நாம் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டுத் தொடர் ஆரம்பிக்கப்படுகின்ற காலகட்டத்தில் மட்டும்தான் நாங்கள் இந்த  விடயத்தைப் பற்றிப் பேசுகின்றோம். பின்பு அதைப் பற்றி மறந்துவிட்டு, அவ்வப்போது உணவின்போது தொட்டுக் கொள்ள ஊறுகாயைப் பயன்படுத்துவதைப் போல் ஆங்காங்கு கதைப்பதோடும், அறிக்கைகள் விடுவதோடும் நிறுத்திக் கொள்கின்றோம் என்ற நிலை மாற வேண்டும்.

எனவே, இது குறித்து நாம் தொடரந்தும் மிகவும் அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து தேசிய ரீதியில் நாம் முன்னெடுத்திருக்க வேண்டிய கடப்பாடுகளை நாம் செவ்வனே நிறைவேற்றியிருந்தால், இன்று இந்த சர்வதேச கடப்பாடுகள் குறித்தோ, ஜி. எஸ். பி. மீதான தடைவிதிப்பு குறித்தோ நாம் அல்லல்பட்டுக் கொண்டிருக்க வேண்டியத் தேவை இருந்திருக்காது.

இதைவிடுத்து, இரு இனங்களினதும் சில அரசியல் தலைமைகள் தொடர்ந்து இனவாத ரீதியாக இரு தரப்பு மக்கள் மீதும் கருத்துக்களைத் திணித்துவருகின்ற நிலையில் நாம், தேசிய நல்லிணக்கம் குறித்தும், அரசியல் தீர்வு குறித்தும் வாதப் பிரதிவாதங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ் பேசுகின்ற மக்களோ, சிங்களம் பேசுகின்ற மக்களோ அடிப்படையில் இனவாதிகள் அல்லர். இந்த மக்களது வாக்குகளை அபகரிப்பதற்காக சில அரசியல் சுயநலவாதிகள் இனவாத வித்தை விதைத்து விடுகின்ற நிலையையே நாம் இங்கு பெரும்பாலாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

இன்று முல்லைதீவு கேப்பாப்புலவு மக்கள் 23 வது நாளாகவும் தங்களது காணி, நிலங்களைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து பரவிபாஞ்சான் மக்களும் போராட்ட களத்திற்குள் வந்துவிட்டனர். காணாமற் போனவர்களது விபரங்களை வெளியிடக் கோரி நேற்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளை இவ்வாறான போராட்டங்கள் இன்னும், இன்னும் பரவலாகி, காணி, நிலங்களை இழந்து நிற்கும் அனைத்து மக்களும், ஏனைய தேவைகளைக் கொண்ட மக்களும் போராட்டங்களில் ஈடுபடமாட்டார்கள் எனக் கூற முடியாது. இதற்கு யார் காரணம்?

தமிழ் மக்களது வரலாற்றை எடுத்துக் கொண்டால் எமது மக்கள் தொடர்ந்து பல்வேறு ஏமாற்றங்களுக்கு உட்பட்ட மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஏமாற்றியவர்கள் இரண்டு தரப்புகளிலும் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டுள்ள நிலைமைகளே அதிகமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த கால தேர்தல்களை எடுத்துக் கொண்டால், எமது மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவே எமது மக்கள் பரவலாக ஏமாற்றப்பட்டனர். நடைமுறைக்கு சாத்தியப்படாத வாக்குறுதிகள் பல அவர்;களுக்கு வழங்கப்பட்டன. எங்களுக்கு வாக்களியுங்கள், நாங்கள் உங்களது காணிகளை படையினரிடமிருந்து மீட்டுத் தருகின்றோம். இராணுவத்தை வடக்கிலிருந்து விரட்டுகின்றோம். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம். காணாமற் போனவர்களைக் கண்டு பிடித்து தருகிறோம். வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்றோம், ஜனாதிபதியும், பிரதமரும் சம~;டி தருவதாக வாக்குறுதி வழங்கியிருக்கிறார்கள், எனவே நாங்கள் சம~;டியைப் பெற்றுத் தருகின்றோம் என்றெல்லாம் கூறிக் கூறி எமது மக்களை இப்படியே தொடர்ந்து ஏமாற்ற முடியுமென நினைத்து, ஏமாற்றி விட்டு எமது மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் இன்று, எமது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போயிருக்கிறார்கள். எமது மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்று நம்பியிருந்த இவர்களை எமது மக்கள் புறந்தள்ளிவிட்டு, சரியான திசைவழி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இனியும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை என சபதம் எடுத்துள்ள எமது மக்கள், தங்களை ஏமாற்றிய அரசில்வாதிகள் மீது கடுமையான வெறுப்பு கொண்ட நிலையில் இனியும் அவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலையில், இன்று வீதிக்கு இறங்கிப் போராடி வருகின்றனர். கேப்பாப்புலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மக்கள் போராட்டம,; நாளை இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் வீட்டுக் கதவுகளையும் தட்டி, தாங்கள் இதுவரையில் ஏமாற்றப்ட்டதற்கான நியாயத்தைக் கோரும்வரை ஓயாத ஒரு நிலையே காணப்படுகின்றது.

இந்த அரசாங்கமோ, எந்த அரசாங்கமோ ஆட்சிக்கு வந்து ஆறுமாதங்களில் அல்லது ஒரு வருட காலத்தில் தலையாயப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் ஆறிய கஞ்சி பழங் கஞ்சி என்ற நிலைதான் அந்தப் பிரச்சினைகளுக்கும் ஏற்படும் என்பதை நான் அடிக்கடிக் கூறி வருகின்றேன்.

கடந்த அரசு தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை எனவே, இந்த அரசைக் கொண்டு வந்து நாங்கள் தீர்ப்போம் என தமிழ் மக்களிடத்தே வாக்குறுதியளித்து, வாக்குகளைப் பெற்று வந்தவர்கள் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த அரசின் முதல் 100 நாட்கள் வேலைத்திட்டத்திலும் சரி, அதன் பின்னரான கடந்த ஒரு வருட காலத்தினுள்ளும் சரி நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுத்தார்களா? இல்லை!

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் வழங்கப்படுகின்றது. அதையேதான் தமிழர்த் தரப்பைப் பொறுத்த வரையிலும், இந்த நாட்டைப் பொறத்தவரையிலும் நான் கூறுகின்றேன். எமது பிரச்சினைகளை நாங்கள்தான் தீர்க்க வேண்டும்.

எமது நாட்டின் யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டம் என்பது, இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்துதன் ஊடாக அந்நியோன்ய நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அதனைப் பேணி வளர்ப்பதற்கான கால கட்டமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஒரு முயற்சிக்கு நாங்கள் செல்லவில்லை. மாறாக, சுயலாப அரசியல் கருதி இனவாதங்களையே மீண்டும், மீண்டும் தூண்டி, வளர்க்கும் செயற்பாடுகளே இரு தரப்பினர் மத்தியிலும் நிலை கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு சூழலில் இருந்து கொண்டு நல்லிணக்கம் குறித்து எடுக்கப்படுகின்ற முயற்சிகள் யாவும் எதிர் நீச்சல் போடுவதை ஒத்ததாகவே இருக்கின்றன. அனைத்து மக்களினதும் உணர்வுகளை கண்டறிந்து கட்டியெழுப்பப்படுவதே  தேசிய நல்லிணக்கம் அன்றி, அது வெறும் கண்காட்சிப் பொருளல்ல.

இந்த நாட்டு மக்களிடையே தேசிய நல்லிணக்கச் சூழலை ஏற்படுத்துவதற்கென, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கென, அதற்காக ஓர் அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கென அல்லது அரசியல் யாப்பு ரீதியிலான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கென சாதகமான ஒரு சூழ்நிலையை இந்த நாட்டு மக்களிடையே உருவாக்குவதற்கான  கலந்துரையாடலொன்றை அடிமட்டத்திலிருந்து நாம் மேற்கொண்டிருக்கின்றோமா? இல்லை. இவ்வாறானதொரு நிலையில் அரசியலாப்பு குறித்து மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் அது பயனுள்ளதாக அமையும்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

தென் பகுதி ஆட்சியாளர்களுடன் நாங்கள் இணக்க அரசியல் நடத்தியபோது, யுத்தத்தை மேற்கொண்ட ஆட்சியாளர்களுடனும், யுத்தத்தை வெற்றிகண்ட ஆட்சியாளர்களுடனுமே இணக்க அரசியல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கிருந்தது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை.

எனவே, எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நியாயமான முறையில் அரசிடம் வைக்கும் கடப்பாடு, இன்று தமிழ் மக்களது அதிகளவிலான வாக்குகளை கொள்ளையிட்டு, இணக்க அரசியல் நடத்தும் தமிழ்த் தரப்பினருக்கு உண்டு. அதே நேரம், நியாயமான கோரிக்கைளை இனங்கண்டு, அவற்றைப் படிப்படியாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசுக்கு உண்டு. அந்த வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால், இன்று நாம் எவருக்கும் தலைகுணிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

ஒரு நாட்டில் ஒரு தரப்பினருக்கு ஏற்படுகின்ற பிரச்சினையை அந்த தரப்பினருக்கு ஏற்பட்ட பிரச்சினைதானே என அதனைத் தீர்க்க முயற்சிக்காமல், அதனை உதாசீனம் செய்வதால் அந்தப் பிரச்சினையானது முழு நாட்டினையும், முழு நாட்டு மக்களையும் எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை கடந்த சுமார் 30 வருட கால யுத்த அனுபவங்களில் கண்டவர்கள் நாங்கள். எனவே, தமிழ் மக்களது நியாயமான பிரச்சினைகளை, எவ்விதமான இடைத் தரகர்களினதும் இடையூறுகளுமின்றித் தீர்ப்பதற்கு இந்த அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு,

எந்தவிதமான பிரிவினைவாதங்களுமற்ற, அனைத்து உரிமைகளையும், கௌரவங்களையும் பெற்றவர்களாக அனைத்து மக்களும் வாழுகின்ற வகையிலான ஒரு நாட்டைக் கட்டியெழுப்பி, அதனை எமது எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்றவகையில் எல்லோரும் ஒன்றிணைந்து உழைப்பதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

 Parliament-of-srilanka-1024x683 copy

Related posts:

இந்திய தேசத்தால் தேடப்படும் குற்றவாளி நான் அல்ல - அரியாலையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பாதிக்கப்படுவது உண்மையே – ஆனாலும் விஷேட சலுகை...
கிளிநொச்சி மக்கள் எதிர்கொண்டுவந்த அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ்!