காணாமல் போனோரின் அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை  – எம்.பி. டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, September 4th, 2018

வலிந்து காணமற்போகச் செய்யப்பட்டவர்கள் என இந்த நாட்டில் எவருமில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி என்றால்,  வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்கின்ற இந்த அலுவலகம் எதற்காக? என எமது மக்கள் கேட்கின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை செலுத்துதல் தொடர்பான விவாதம் இன்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் என நீங்கள் கூறுகிறீர்கள். அவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்கள் அவர்களது உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் எனக் கூற முடியாது. நீங்கள் கூறுகின்றவாறு வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், அவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து சொல்லுங்கள் என்றே எமது மக்கள் கேட்கிறார்கள்.

என்றாலும், வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் பற்றிய மற்றும் காணாமற் போகச் செய்தவர்கள் பற்றிய தகவல்களை மேற்படி அலுவலகத்தின் மூலமாக எமது மக்களுக்கு அறிய முடியுமா? என்றொரு கேள்வியும் எமது மக்களிடத்தே எழுந்துள்ளது.

மேற்படி அலுவலகத்தினால் திரட்டப்படும் எந்தவொரு தகவல்களையும் எவருக்கேனும் வழங்கக்கூடாது என மேற்படி காணாமற்போன நபர்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் 15 (1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளமையினால், இந்த கேள்வி எமது மக்களிடையே எழுந்துள்ளது.

இந்தவகையில் திரட்டப்படுகின்ற தகவல்களை எமது மக்கள் அறிய வாய்ப்பு இல்லை என்கின்றபோதும், மேற்படி அலுவலகத்தின் புலனாய்வுகளால் கண்டுகொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எவருக்கும் எதிராக, குற்றவியல் அல்லது சிவில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும், மேற்படி அலுவலகம் தொடர்பில் எமது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்றே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

மேலும், மேற்படி அலுவலகம் தொடர்பிலான சட்டத்தின் 3(2)ஆம் பிரிவின்படி மேற்படி அலுவலகமானது தொடர்ந்து இருக்குமென்று கூறப்படுகின்ற நிலையில், இதே சட்டத்தின் 6ஆம் பிரிவானது, மேற்படி அலுவலகத்தின் உறுப்பினர்கள் மேற்படி அலுவலகம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்கள் இருக்கலாம் எனக் கூறுகின்றது.

இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இருக்கின்ற உறுப்பினர்கள் மூன்று வருடங்களின் பின்னர் மீள நியமிக்கப்படுவார்களா? அவ்வாறு இவர்கள் மீள் நியமனங்கள் பெற வேண்டும் எனில், அரசுக்கு விஸ்வாசமாக இவர்கள் செயற்பட மாட்டார்கள் எனக் கூற முடியுமா? குறித்த மூன்று வருடங்களின் பின்னர் இவர்கள் மாற்றப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால், அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள்? மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடர்வார்களா? அல்லது இப்போது தொடர்ந்திருப்பதில் இருந்து ஆரம்பிப்பார்களா? ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் ஒவ்வொன்றும் ஆரம்பித்தவற்றையே மீண்டும், மீண்டும் ஆரம்பித்து, தொடர்ந்ததுபோல், தற்போதும் அந்த நடைமுறையே மேற்படி அலுவலகத்தின் மூலமும் மேற்கொள்ள முனைவதைப் போல், நிலைமை இப்படியே தொடருமா? போன்ற கேள்விகள் எமது மக்கள் மத்தியில் இருக்கின்றன. எனவே, இத்தகைய கேள்விகளுக்கு எமது மக்களுக்கு தெளிவான பதில்களை வழங்க வேண்டியுள்ளது.

செய்யப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்ற முடிவுக்கு மேற்படி அலுவலகம் வந்துள்ளதா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, இது தொடர்பில் தெளிவான விளக்கம் எமது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை...
எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட...
யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணை...

போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் ...
தகரத்திற்கு தங்க முலாம்!.. தேர்தல் கோசத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசப்படுகின்றது எனக் கூறுகின்றார்...