கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 15th, 2019

வளப் பற்றாக்குறைகள் காரணமாக இன்று மூடப்படும் நிலைக்கு அரச பாடசாலைகள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுமதி பெற்று இயங்கும் தனியார் பாடசாலைகள் மற்றும் அவற்றின் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகின்ற ஏனைய தனியார் பாடசாலைகள் உட்பட 400 தனியார் பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசியரியர்களுக்கு ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கமைவாக முதற்கட்டமாக அரச அனுமதி பெற்றதும், அரச உதவி பெறாததுமான 13 தனியார் பாடசாலைகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு ஊதியமும், கொடுப்பனவும் வழங்கவென தற்போது 160 மில்லியன் ரூபா நிதியை கல்வி அமைச்சு வழங்கவுள்ளதாகவும் அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆகவே, அரச பாடசாலைகள் மூடப்படுவதும், தனியார் பாடசாலைகளுக்கென அரச நிதி ஒதுக்கல்களும் தொடருமானால், இந்த நாட்டின் இலவசக் கல்விக்கு மூடுவிழரவினை நீங்கள் விரைவிலேயே நடத்தி விடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

மறுபக்கத்தில் இந்திய அரசின் 250 மில்லியன் ரூபா நிதியுதவியினால் வடக்கு மாகாணத்தில் 27 பாடசாலைகளில் கட்டிடங்களை அமைக்கும் பணி 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கட்டுமானப் பணிகள் கொழும்பு அரசினால் முன்னெடுக்கப்பட்டு, 12 பாடசாலைகளில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் 15 பாடசாலைகளில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முடிவடைந்திருக்க வேண்டிய கட்டடப் பணிகள்  இன்னும் முடியவில்லை. இந்திய அரசு ஒதுக்கிய அந்த நிதிக்கு கொழும்பில் என்னவாயிற்று? என்று தெரியவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்வர்கள் ஆசியர் பணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும், இவர்கள் சேவையாற்றியிருந்த 03 வருட காலத்தை அவர்களது சேவைக் காலத்துடன் சேர்த்துக் கொள்ளாது அவர்களை 2016ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டவர்களாகக் கணித்து அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆசிரியர்கள் வேதனையில் இருக்கிறார்கள். இவ்வாறான அநேகமான பிரச்சினைகள் வடக்கு மாகாண கல்வித்துறையில் காணப்படுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

தமிழர் தாயகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டது தேர்தல்கள் திணைக்களம்!
தமிழ் மக்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர்: சிங்கள மக்களின் உரிமைகளையல்ல - சுதந்திரக் கட்சியின் செயலா...
மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!