கல்முனை வடக்கு தமிழர் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, June 20th, 2019

கிழக்கு மாகாணம் கல்முனை வடக்கில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயம் இரு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பாதிக்கச் செய்யும் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் விடயத்தையும் இந்தச் சபையில் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இவ்விவகாரத்தை இலகுவாகத் தீர்த்துவிடாமல் காலம் தாழ்த்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் அரசுக்கும் தெளிவுபடுத்துவது அவசியமென்றே கருதுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும், அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

29 கிராம சேவையாளர் பிரிவையும், 36 ஆயிரம் மக்களையும் உள்ளடக்கிய கல்முனை வடக்கு பிரதேச நிர்வாகத்தை 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி “கல்முனை வடக்கு” உப பிரதேச செயலகமாக அமைக்கப்பட்டது.

இதன் பின்னர் 1993ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் உப பிரதேச செயலகங்களாகக் காணப்பட்ட கல்முனை வடக்கு பிரதேசம் உள்ளடங்களாக 28 உப பிரதேச செயலகங்களையும் தரம் உயர்த்துவது என்ற அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கல்முனை வடக்கு பிரதேசம் தவிர்ந்த ஏனைய உப பிரதேசங்கள் தரம் உயர்த்தப்பட்டன.

ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் அரசியல் அழுத்தங்கள் காரணமாக தரம் உயர்த்தப்படாமல் புறக்கணிப்புச் செய்யப்பட்டது.

இவ்விடயத்தில் தமிழ் மக்களின் கோரிக்கையையும், அதிலுள்ள நியாயத்தையும் அரசு புரிந்து கொண்டு விரைவாக தீர்வொன்றைக்காண வேண்டும். அதேவேளை இவ்விவகாரத்தை சிலர் தமது சுயலாப அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிட்டு, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையே முரண்பாட்டையும், பகையை ஏற்படுத்திவிடும் செயற்பாட்டைக் கொண்டிருப்பதை கண்டிக்கின்றேன்.

ஒரு இனத்தின் உரிமை மறுக்கும் இன்னொரு இனம் தனக்கான உரிமையையும் அனுபவிப்பதில்லை என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அனுபவ ரீதியாக இலங்கை மக்கள் அனைவருமே அனுபவித்தும் வந்துள்ளோம் என்பதே வரலாறாகும்.

எனவே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் சுயலாபங்களுக்கு அப்பால் ஆராயப்பட்டு காலம் தாழத்தாது தீர்வு காணப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை இச்சபையில் மீண்டும் முன்வைக்கின்றேன்.

Related posts: