கற்பாறையில் விதைத்துவிட்டு பயனை எதிர்பார்க்க முடியாது – கரைதுறைப்பற்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, February 16th, 2019

இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் தவறான வழிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டமைதான் தமிழர்தரப்பு செய்த மிகப்பெரிய தவறு. இதன் பிரதிபலிப்புகளே இன்று நாம் கண்டுவரும் துன்பதுயரங்களுக்கெல்லாம் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கட்சியின் வட்டார நிர்வாகிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழ்மக்கள் உரிமைக்காக போராடிய போராட்டமானது சிலரது சுயநலன்களிற்காக முன்னெடுக்கப்பட்டதால் அது திசைமாறிச் செல்ல நேரிட்டது. இதன்விளைவுகளால் போராடிய பல அமைப்புகளுடன் இருந்த ஒற்றுமை சீரழிக்கப்பட்டது.

இதனால் அதையடுத்து போராட்டமும் திசைமாறிச்சென்றது. இந்நிலையில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் எமது மக்களுக்கு மாகாண அலகு என்னும் முறை மூலம் பல அதிகாரங்கள் அடங்கிய தீர்வு கிடைக்கப்பெற்றது. ஆனால் அதனை தமிழ் தரப்பினர் தமது சுயநலன்களிற்காக தூக்கி எறிந்ததனால் இன்றுவரை எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

கற்பாறையில் விதைத்துவிட்டு பயனை எதிர்பார்க்கக் கூடாது. நாம் எமது இனத்தின் நலன்சார்ந்துதான் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்கவேண்டும். அதுவே இன்றைய தேவையுமாகும். அந்தவகையில் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமேயானால் அவர்களது நலன்சார்ந்து உழைப்பவர்களிடமே அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும்.

நாம் இயக்கங்களுக்கிடையிலான பேதங்களையோ மக்களுக்கிடையேயான வேற்றுமைகளையோ பார்ப்பது கிடையாது. மக்களுக்கு மத்தியிலிருந்து அவர்களது வலிகளைக் கண்டவர்கள் நாம். அந்தவகையிலேயே இவ்வாறு நான் உங்களிடம் கூறுகின்றேன். இன்று வறுமையில் முதன்மை பெறும் மாகாணமாக வடக்கு மாகாணமே காணப்படுகிறது. இந்நிலையை உருவாக்கியவர்கள் யார்? உருவாகக் காரணம் என்ன? இவற்றையெல்லாம் சீர் தூக்கிப் பார்ப்போமேயானால் தமிழர்களது கடந்த கால அரசியல் தலைவர்களே காரணமாகின்றனர். அந்தவகையில் தான் உங்களிடம் நாம் கேட்கின்றோம். நம்பிக்கையுடன் எமக்கு அரசியல் அதிகாரங்களைத் தாருங்கள். நிச்சயமாக உங்களுக்கொரு சிறந்த வாழ்வியல் நிலையை உருவாக்கிக்காட்டுவோம் என்றார்.

Related posts: