கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் யாழில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு கடிதம்!

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது அண்மையில் நடந்த தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு கர்நாடக அரசுடன் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து துன்பத்துக்குள்ளான மக்களுக்கு ஆறுதலைத் தெரிவித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டுக்கடிதத்தை யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஏ.நடராஜனிடம் கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவரின் வாசஸ்தலத்தில் இக்கடிதம் இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது.
மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவருமான தவராசா, கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கை தமிழரசு கட்சி சார்பில் குலநாயகம், புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இளங்கோ ஆகியோர் ஒன்றிணைந்து இக்கடிதத்தை ஏ.நடராஜனிடம் கையளித்தனர்.
இக்கடிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி நேற்றையதினம் கையொப்பமிட்டிருந்தார்.
முன்பதாக குறித்த கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தியத் துணைத்தூதுவரால் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இக்கடிதத்தை கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இந்திய துணைத்தூதுவரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|