கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம் – முல்லைத்தீவில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, February 16th, 2019

தமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த தமிழ்த்தலைமைகளின் தவறான செயற்பாடுகளே தமிழ் மக்கள் இன்றுவரை எந்தெவொரு தீர்வையும் பெறமுடியாதிருக்கின்றது.

இதை உணர்ந்து எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் செயற்படுவார்களேயானால் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். .

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பாரதிதாசன் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற கட்சியின் வட்டார நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

புதிய அரசியல் அமைப்பின் மூலம் தீர்வுகளைக் கண்டுவிடலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று மற்றுமொரு தேர்தலை முன்னிறுத்தியதாக தமது பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். ஆனால் புதிய அரசியலமைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன.

சாத்தியமானது எது? சாத்தியமானவர்கள் யார்? என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு தமது அரசியல் அதிகாரங்களை வழங்குவதனூடாகவே நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

நாம் கடந்த காலத்தில் எமக்கிருந்த சிறிய அதிகாரங்களை எல்லாம் மக்களுக்கானதாகவே பயன்படுத்திக்காட்டியிருந்தோம். அதேபோல் அரசியல் அதிகாரங்கள் முழுமையாக எம்மிடம் வழங்கப்பட்டிருந்தால் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கு என்றோ தீர்வைப் பெற்றுத்தந்திருப்போம்.

ஆனால் மக்கள் தவறானவர்களிடம் அதிகாரங்களைக்கொடுத்து தமது எதிர்காலத்தை வீணடித்ததாகவே தெரிகின்றது. இருக்கின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக கையிலெடுத்தால் அதனூடாகவே நாம் எமது பிரச்சினைகளுக்கு அதிகமான தீர்வுகளைப் பெற்றிருக்கமுடியும்.

அந்தவகையில் யுத்தத்தை எதிர்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தையும் அங்குள்ள மக்களது வாழ்வியல் நிலையையும் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நாம் பாரபட்சங்கள் காட்டி சேவை செய்வது கிடையாது. எங்கு சேவை இருக்கிறதோ அதை நிறைவேற்றிக் கொடுப்பதே எமது செயற்பாடாகும்.

எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களை எமக்கு வழங்குவார்களேயானால் நிச்சயமாக அரசியலுரிமை மற்றும் அபிவிருத்திகளுக்கான தீர்வுகளை நிரந்தரமாக பெற்றுத்தர எம்மால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாட...
தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவா...