கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள் வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 29th, 2018

கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள்  வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட்டு எமது கட்சியின் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வென்றெடுக்கும் வகையில் கட்சித் தோழர்களும் முக்கியஸ்தர்களும் புதிய ஆண்டில் புத்தெழுச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற கட்சியின் வடக்கு மாகாண ஒரு தொகுதி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய வருடத்தை நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் எதிர்கொண்டு கட்சியின் இலட்சியக் கனவையும் கொள்கையையும் வென்றெடுக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

எமது பொறிமுறை ஊடாகவே மக்கள் நலன் சார்ந்த செயற்திட்டங்களை செயற்படுத்த முடியுமென நாம் கடந்த காலங்களில் செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.

ஒரு சில தமிழ் ஊடகங்கள் எமக்கு எதிராகவும் எமக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு எமக்கு எதிராக மற்றும் திரிவுபடுத்தப்படும் செய்திகள் தொடர்பாக மக்களுக்கு உண்மை நிலவரங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கிறது.

அதுமாத்திரமன்று மக்கள் நலன் சார்ந்த செயற்திட்டங்களை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கு எமக்கு மக்களின் ஆணையும் அரசியல் பலமும் இன்றியமையாதவை.

எனவே தான் புதியதொரு ஆண்டிலே நாம் புதிய வேகத்துடனும் நம்பிக்கையுடனும் எமது கட்சியின் கொள்கை மற்றும் இலட்சியக்கனவை ஈடேற்றும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியது அவசியமானது.

அவ்வாறு எமது ஒன்றிணைந்த உழைப்பின் ஊடாகவே நாம் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளையில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி உள்ளிட்ட இதர வேலைத்திட்டங்களை தடங்கல் இன்றி விரைவாக முன்னெடுக்கமுடியும்.

எமது மக்களின் எதிர்கால வளமான வாழ்வை கருத்திற் கொண்டு தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் உழைக்கவேண்டும். அண்மையில் எமக்கு கிடைக்கப் பெற்ற அமைச்சுப் பதவியினூடாக சொற்ப நாட்களுக்குள் பல்வேறுபட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுத்து சாதித்துக்காட்டியிருந்தோம்.

ஆனால் துரதிஸ்டவசமாக தற்போதுள்ள அரசில் அமைச்சுப்பதவியில் தொடராததன் காரணமாக குறித்த பணிகளை முழுமைப்படுத்த முடியாத நிலை இருக்கின்றது. எனவே இனிவரும் காலங்களில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களிலும் வாய்ப்புகளினூடாகவும் மக்கள் எமக்கு அரசியல் பலத்தை தருவார்களேயானால் மக்களின் எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஈடேற்றம் காணும் வகையில் நாம் கடந்த காலங்களைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் நிச்சயம் பணியாற்றுவோம் என்று டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.

இதனிடையே நடப்பு வருடத்தில் கட்சியின் வளர்ச்சிக்காகவும் உயர்ச்சிக்காகவும் உழைத்த தோழர்களுக்கும் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட டக்ளஸ் தேவானந்தா புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

DSC_0779

49203567_355159978609108_6586970009325535232_n

49069811_586413728471891_5354522052747329536_n

49002945_573438263118077_2683448536648908800_n

49044808_219848515480901_8417572447695405056_n

Related posts: