கடல் வளங்களை கையளிப்பதுதான் சர்வதேச தலையீடா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Tuesday, July 17th, 2018

மேற்குலகின் போட்டிக் களமாக கிழக்குப் பிரதேசத்தினை மாற்றுவதற்கே இந்த அரசு தற்போது செயற்பட்டு வருவதாக எமது மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. அந்தவகையில், ‘சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வதேசம் தலையிட வேண்டும்’ என எதற்கெடுத்தாலும் சில தமிழ்த் தலைவர்கள் கூறுவதைப்போல், அந்த சர்வதேச தலையீடு இது தானா? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், சிங்கப்பூர் குடியரசிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய சபை ஒத்திவைப்பின் போதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இறக்குமதிகள், வரி அறவீடுகள், விற்பனைகள் என்ற முக்கோண நிலையில் – அதாவது உள்ளூர் உற்பத்திகளை – ஏற்றுமதிகளைப் பற்றி கவலைப்படாத இறக்குமதிகள்,  மக்களின் வறுமை நிலைமையினைப் பற்றிக் கவலைப்படாத வரிகள் விதிப்பு, நாட்டைப் பற்றி கவலைப்படாத நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தல் என்ற முக்கோணத்தில் இந்த நாடு திண்டாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இத்தகைய வர்த்தக மற்றும் ஏனைய ஒப்பந்தங்கள் குறித்தும் கதைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்திற்கு வருவதற்கு முன்பதாக, இன்னுமொரு ஒப்பந்தம் தொடர்பிலான சில சந்தேகங்களை இங்கே வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

திருகோணமலையை மையப்படுத்தியதாக வடக்கில் முல்லைத்தீவிலிருந்து, கிழக்கில் மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசங்களை உள்ளடக்கியதாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளல் என்ற பெயரில் அமெரிக்காவின் சுலும்பேக்கர் என்ற நிறுவனம், இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சுடன் கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இத்தகைய திட்டங்கள் இந்த நாட்டில் ஏனைய கடற் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப் படவுள்ளதாக நீங்கள் கூறினாலும், அது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பதை உங்களால் கூற முடியாது என்றே நான் கருதுகின்றேன். ஏனெனில், இத்திட்டத்தின் நோக்கமானது கிழக்குக் கடற் பிரதேசங்களை மாத்திரமே இலக்காகக் கொண்டு, அமெரிக்காவின் இராணுவ கேந்திர நலன்களுடன் ஒன்றறக் கலந்ததாக இருப்பதாகவே தெரிய வருகின்றது.

2016ஆம் ஆண்டு காலகட்டத்திலும் இத்தகைய கிழக்குக் கடற் பிரதேசத்தில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறப்பட்டு பிரெஞ்சு நிறுவனமான வுழவயட – டோடல் – எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டமைக்கும், தற்போது அதே விதமானதோர் ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளமைக்கும் இடையில் தொடர்புகள் ஏதேனும் இருக்கின்றனவா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அதே நேரம், இத்தகைய திட்டங்களின் ஊடாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலை கொண்டுள்ள குடிப் பரம்பலை சிதைத்துவிட்டு, பல்வேறு குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் எமது மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts: