கடலுணவுசார் முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Tuesday, January 19th, 2021

கடலுணவுகளை உற்பத்தி செய்கின்ற பண்ணைகளை அமைப்பதற்கு முன்வருகின்ற முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தனியார் முதலீட்டாளர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொடுவா மீன் உற்பத்திப் பண்ணைக்கான அண்மைய விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

“கொட்பே மீன்பிடித் துறைமுகத்தினை அண்மித்த கடற் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொடுவா மீன் உற்பத்திப் பண்ணையினையும் பார்வையிட்டதுடன், அவ்வாறான பண்ணைகளை நாடளாவிய ரீதியில் உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டிருந்தது.

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களின் இணைந்த முதலீடில் சுமார் 20 கூடுகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கூட்டிலும் சுமார் 1 லட்சம் கொடுவா மீன்கள் என்ற அடிப்படையில் சுமார் 20 இலட்சம் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இவற்றுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் சிறந்த சந்தை வாய்ப்பு காணப்படுகின்றது.

இதன்மூலம் நாட்டிற்கு பெருமளவான அந்நியச் செலாவணி கிடைப்பதுடன் வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படுகின்றன. அதைவிட, குறித்த மீன்களுக்கான உணவு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், அதனை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை உள்நாட்டில் அமைப்போமாக இருந்தால் இன்னும் அதிகளவான வருமானத்தினையும் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

அதைவிட, உள்நாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதித் தரத்திலான கொடுவா மீன்களை நியாயமான விலையில் வழங்க முடியும். எனவே நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் இதுபோன்ற கடலுணவு உற்பத்திப் பண்ணைகளை உருவாக்க முன்வருகின்ற முதலீட்டாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சு தயாராக இருக்கின்றது”  என்று தெரிவித்துள்ளார்

Related posts:

யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலை க்குத் தள்ளுகின்றது  - நாடாளு மன்றத்தில் டக்ளஸ் ...
அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச...
அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி - ஜனாதிபதி தெரிவிப்பு!

சவால்களையும் இடர்களையும் எதிர்கொண்டு மக்கள் பணிகளில் வெற்றிகண்டு வருகின்றோம் - டக்ளஸ் தேவானந்தா!
ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம்: 3,642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை - ...