கடலில் அதிக மீனினங்கள் இருக்கும் இடத்தை அறிய அதிநவீன கருவி – எரிபொருள் செலவை குறைக்கவும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023

நாட்டின் பொருளாதார நிலைபேறுக்கு ஒரு பக்கம் பசுமை பொருளதாரத்தின் பங்களிப்பினைப் பெறுகின்ற அதேவேளை, நீலப் பொருளாதாரத்தின் மூலமான பங்களிப்பினையும், பசுமையூடான நீர் வேளாண்மைப் பொருளாதாரத்தின் பங்களிப்பினையும் வழங்குவதற்கென, அத்துறைகளை மேலும் வலுப்படுத்துவதே எமது எதிர்கால எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அந்தவகையில் இந்த ஆண்டில் எமது மேலதிக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றின் பயன்பாடுகளை நாம் எதிர்காலங்களில் அடைய முடியும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான சபை வாத – விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.-

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இந்த வருடம் ஜனவரி மாதம்முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் எமது மீனின உற்பத்தியானது, கடலோரத்தினைச் சார்ந்த கடற்றொழிலில் நூற்றுக்கு 40 வீதத்தினையும், ஆழ்கடல் கடற்றொழிலில் நூற்றுக்கு 32.7 வீதத்தினையும், நன்னீர் வோளாண்மையில் நூற்றுக்கு 27.2 வீதத்தினையும் கொண்டுள்ளது. அந்த வகையில், மொத்தமாக 293,880 மெற்றிக் தொன் மீனின அறுவடையினை நாம் அடைந்துள்ளோம்.

தனித்தனியே எடுத்துக் கொண்டால், கடலோர கடற்றொழில் உற்பத்தியானது 117.195 மெற்றிக் தொன்னாகவும், ஆழ்கடல் கடற்றொழில் உற்பத்தியானது 95.870 மெற்றிக் தொன்னாகவும், நன்னீர் வேளாண்மை உற்பத்தியானது 80.815 மெற்றிக் தொன்னாகவும் இருந்துள்ளது.

இதே காலகட்டத்தில் மொத்த மீனினக் குஞ்சுகளின் உற்பத்தி 54.46 மில்லியனாகும். இதில், 17.86 மில்லியன்,  நீர்வள செய்கை அபிவிருத்தி நிலையங்களின் மூலமும், ஏனையவை தனியார்த்துறை மூலமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், 32.15 மில்லியன், நன்னீர் இறால் குடம்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றில், 25.01 மில்லியன் இறால் குடம்பிகள் நீர்வளச் செய்கைகள் அபிவிருத்தி நிலையங்களினாலும், ஏனையவை தனியார்த் துறையினராலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 591 மில்லியன் உவர் நீர் இறால் குடம்பிகள் தனியார்த் துறையினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இது அவ்வாறிருக்க இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொண்டால், 34,412.5 மெற்றிக் தொன் மீனின மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 16.952.2 மில்லியன் ரூபாவாகும்.

இவற்றில் அதிகமாக இலங்கையில் உற்பத்தியாகாத அல்லது உற்பத்தி குறைந்த மீனினங்கள், கருவாடு வகைகள் மற்றும் மீனின உணவு என்பன அடங்குவதுடன், இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற மீனினங்களில் ஓர் அளவு, பெறுமதி சேர்க்கப்பட்டு, மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏனையவை மருத்துவமனைகளுக்கும், படையினருக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், தேசிய மட்டத்தில் மீனினங்களின் அறுவடை அதிகரிக்கின்ற செப்ரெம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இறக்குமதி மீனினங்களுக்கான இறக்குமதி வரியினை கிலோவுக்கு 400 ரூபாவாகவும், தேசிய மட்டத்தில் மீனினங்களின் அறுவடை குறைகின்ற ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுயில் இறக்குமதி மீனினங்களுக்கான இறக்குமதி வரியினை 275 ரூபாவாகவும் நிர்ணயித்து வருகின்றோம்.

ஏற்றுமதியினைப் பொறுத்த வரையில், 17,890.7 மெற்றிக் தொன் மீனினங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 7264.7 மில்லியன் ரூபாவாகும். அலங்கார மீன்களின் ஏற்றுமதி மூலம் 6373.7 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. நீலப் பொருளாதாரத்திற்கேற்ப ஆழ்கடல் மற்றும் கரையினை அண்டியதான கடற்றொழில் உற்பத்திகளை மேலும் அதிகரித்துக்கொள்ளும் தேவை எம் முன்னே இருக்கின்றது. அந்த வகையில் அதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக, சர்வதேச சந்தையில் டீசல் எரிபொருளின் விலையேற்றம் காரணமாக பலநாட் களங்களில் பலவும் கடலில் வெகுதூரம் செல்லாமல் குறிப்பிட்டளவு தூரம் வரையில் சென்று, ஒரே இடத்திலேயே கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதால் மீனின அறுவடையில் குறைவினைக் காணக்கூடியதாக இருக்கிறது. மண்ணெண்ணெய் எரிபொருளின் விலையேற்றம் காரணமாக குறிப்பிட்டளவு சிறிய படகுகளே கடற்றொழிலில் ஈடுபடுகின்றன.

எனவே, கடலில் அதிக மீனினங்கள் காணப்படுகின்ற இடங்களைக் காட்டுகின்ற தொழில்நுட்பக் கருவிகளை கடற்றொழில் படகுகளில் பொருத்துவது தொடர்பில் நாம் சர்வதேச மற்றும் தேசிய தனியார்த்துறையினருடன் கலந்துரையாடி வருகின்றோம். இந்த கருவி கடற்றொழில் படகுகளில் பொருத்தப்பட்டால், எரிபொருளுக்கான செலவினையும், காலத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: