கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமம் காப்பாற்றப்படுமா? டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கேள்வி!

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் கிராமத்தில் 1998ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 01ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகமானது இன்னும் பாவனைக்கு உட்படுத்தப்படாத நிலையில், இத் துறைமுகப் பணிகளுக்காக கடல் நீரேந்துப் பரப்பைப் பாரிய பாறாங் கற்களைக் கொண்டு மூடியதன் காரணமாக ஏற்படுகின்ற கடலலை நகர்வுகள் துறைமுகத்தை அண்டிய பகுதிகளை ஆட்கொண்டும், தொடர் கடலலை அரிப்புக் காரணமாக சுமார் 600 மீற்றர் நிலப்பரப்பையும், தென்னை நிலங்களையும் கடல் உட்கொண்டுள்ளதுடன், உவர் நீர், விவசாய நிலங்களில் புகுந்து விவசாயச் செய்கைகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒலுவில் கிராமப் பகுதியினைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்ஹவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், பாரம்பரிய விவசாயக் கிராமமான இக் கிராமத்தில் மேற்படி துறைமுகப் பணிகள் காரணமாக பல்வேறு இடையூறுகளுக்கு இம் மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இத் துறைமுகம் ஏற்றுமதி துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும்போது 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பினை வழங்க முடியுமென்றும், 2015ம் ஆண்டாகும்போது சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியுமென்றும் கூறப்பட்டது. எனவே, அதன் பிரகாரம் இத்துறைமுகம் ஏற்றுமதித் துறைமுகமாக எப்போது அபிவிருத்தி செய்யப்படுமென வினவியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், 2008ம் ஆண்டில் 42 பேருடைய தனியார் காணிகள் இதற்கென சுவீகரிக்கப்பட்டு, அவர்களில் 29 பேருக்கு இதுவரையில் நட்டஈடுகள் வழங்கப்படாத நிலையில், இவர்களுக்கான நட்டஈடுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|