கடலட்டை குஞ்சுகளை பெற்றுக்கொள்தற்கு புதிய ஒழுங்கு முறை அறிமுகம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 28th, 2022


~

யாழ் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக்கொள்வது தொர்பான ஒழுங்கு முறையினை ஏற்படுத்தல் உட்பட, கடலட்டைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் பற்றி ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியேற்ற பின்னர், குறுகிய காலத்தில் பெருமளவான பண்ணைகள் உருவாக்கப்பட்டிருப்பதனால், அவற்றுக்கு தேவையான கடலட்டை குஞ்சுகளை கடலில் இருந்து பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சினால் மட்டுப்படுத்தப்பட்ட – தற்காலிக அனுமதியை வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், தற்காலிக அனுமதியைப் பெற்றுக்கொண்டவர்கள், பிடிக்கின்ற கடலட்டை குஞ்சுகளை, கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக, பண்ணையாளர்களுக்கு வழங்குவதுடன் மேலதிகமானவற்றை கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்குமாறும் கடற்றொழில் அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 50 கிராம் – 80 கிராம் வரையிலான கடலட்டை குஞ்சுகளை கடலில் இருந்து பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், 50 கிராம் – 65 கிராம் வரையான நிறையுடைய கடலட்டை குஞ்சுகளுக்கு 75 ரூபாயும், 65 கிராம் – 75 கிராம் வரையான நிறையுடைய குஞ்சுகளுக்கான விலையாக 90 ரூபாயும், 75 – 80 கிராம் வரையான கடலட்டை குஞ்சுகளுக்கு 100 ரூபாயாகவும், கடற்றொழில் அமைச்சினால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்காலத்தில் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்யும் நோக்கில் கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்து பராமரிப்பதற்கு தேவையான நிலையங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ந்தும் கடலில் இயற்கையாக உருவாகின்ற கடலட்டை குஞ்சுகளை கடலில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாது எனவும், அவ்வாறு அனுமதிக்கபடுமானால் கடல் வளத்தினை பாதிப்படையச் செய்து விடும் எனவும் தெரிவித்திருந்தார்.

இக்கலந்துரையாடலில், கடலட்டை திருடப்படுதல் மற்றும் எரிபொருள் பிரச்சினை உட்பட பல விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 28.05.2022

Related posts: