கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் விவசாயத் துறையில் ஈடுபடும் மக்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுடவேண்டும்!
Tuesday, May 22nd, 2018இன்று எமது சாதாரண மக்களின் பிரதான எரிபொருளான மண்ணெண்ணெய்க்கும் விலையை அதிகளவில் உயர்த்தி, உயர்த்திய விலையைவிட மேலும் அதிகரித்த விலையில் எமது பகுதியிலே – குறிப்பாக தீவகப் பகுதிகளிலே விற்பனை செய்யப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியத் தேவையை இங்கு உணர்த்துவதுடன், கடற்றொழிலாளர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதுபோல், நீரிறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தி விவசாயத் துறையிலே ஈடுபடுகின்ற மக்களுக்கும் அதே மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
எமது பகுதிகளின் அபிவிருத்திகள் பற்றி பேசப்படுகின்றன. எழுத்திலே காட்டப்படுகின்றன. ஆனால், நடைமுறை செயற்பாடு எனப் பார்த்தால் எல்லாமே பூச்சியமாகவே இருக்கின்றன.
எமது பகுதிகளுக்கென குறிப்பிடப்படுகின்ற அபிவிருத்திகள் பல்வேறு காரணங்களைக் காட்டி, அங்கிருந்து திருப்பப்படுகின்ற காரியங்களும் நிறையவே நடந்து கொண்டிருக்கின்றன.
உங்களுக்கு எதுவெல்லாம் சாதகமோ அதை எல்லாம் அங்கு செய்ய முனைகின்றீர்கள். எமது மக்களுக்கு எதுவெல்லாம் சாதகமோ, அவை தொடர்பில் இழுத்தடித்து வருகிறீர்கள். அங்கே மாகாண சபையைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்போர், எமது மக்களுக்கு சாதகமானவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, வெறும் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே தீர்மானமாக இருக்கிறார்கள்.
அன்றாடத் தேவைகள், அபிவிருத்தி, அரசியல் தீர்வு என்ற அடிப்படை நோக்கில் எமது மக்களது தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றிக் கொடுத்தவர்கள் நாங்கள். இப்போதைய நிலையில் இந்த எதுவுமே அற்ற நிலையில் எமது மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியில், சமூக ரீதியில், அரசியல் அதிகார ரீதியில், ஏன், மனிதாபிமான ரீதியில்கூட கைவிடப்பட்டவர்களாகவே எமது மக்கள் இன்று ஆளாக்கப்பட்டுள்ளனர்.
எனவே, எமது மக்களை எந்த ரீதியில் நீங்கள் அபிவிருத்தி செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வியை முன்வைக்கிறேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
(நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டத்தின் கீழான இரு கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|