கடற்றொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு விசேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, January 11th, 2022

கடற்றொழிலாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு காப்புறுதித் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழிலார்களுக்கு நன்மையளிக்கும் வகையில் காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவது தொடர்பாக தேசிய காப்புறுதிக் கூட்டுத்தானத்தின் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் நேற்று (10.01.2022) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கிய காப்புறுதித் திட்டத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த காலங்களில் பெரும்பாலும் தனியார் காப்புறுதி நிறுவனங்களினாலேயே கடற்றொழிலாளர்களுக்கான காப்புறுதித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வந்தன.

இவற்றினால் கடற்றொழிலாளர்களுக்கு நியாயமான நன்மைகள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய, தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக சிறந்த காப்புறுதித் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அனைத்து கடற்றொழிலாளர்களையும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்க,  கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  சுசந்த கஹாவத்த ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: