கடந்த காலத்தில்  தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, February 3rd, 2018

நாம் சொன்ன விடயங்களை செயற்படுத்திக் காட்டியதால் தான் மக்கள் இன்றும் எமக்கான ஆதரவை நல்கிவருகின்றார்கள் எனவும் இனிமேலும் நாங்கள் சொன்னதைச் செய்பவர்களாகவும் செய்வதையே சொல்பவர்களாகவும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம்  நெடுந்தீவு கிழக்கு செபநாயகபுரம் பகுதியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

முன்னொரு காலத்தில் இந்த மக்கள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நாம் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் 1991 ஆம் ஆண்டுமுதல் இற்றைவரையில் நெடுந்தீவு மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் அவர்கள் மீது அக்கறை கொண்டு தீர்வு கண்டுவருபவர்களாகவும் இருக்கின்றோம்.

1991 ஆண்டு காலப்பகுதியில் இந்த மக்களின் இடர்பாடுகள் குறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் கொழும்பில் என்னை வந்து சந்தித்து நெடுந்தீவு மக்களின் அவலத்திற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறும் கோரினர்.

அதனடிப்படையில் தான் நாம் இங்கு விஜயம் மேற்கொண்டு இந்த மக்களின் அவலங்களை தீர்த்துவைத்த அந்த கணப்பொழுதிலிருந்து இன்றுவரையில் இந்த மக்களினதும் பிரதேசத்தினதும் வாழ்வாதாரத்திலும் பொருளாதார மேம்பாட்டிலும் அதிக அக்கறையுடன் உழைத்து வருகின்றோம்.

எமது கூட்டங்களுக்கு மக்கள் திரண்டுவருவது கண்டு நாம் மக்களுடைய எதிர்பார்ப்புக்களையும் கனவுகளையும் அவர்களுடைய எண்ணங்களையும் அறிந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தை நாம் நிச்சயம் ஏற்படுத்தித் தருவோம்.

கடந்த காலங்களில் தீவிரவாதத்தையும் தேசியவாதத்தையும் பேசியவர்களால் தாம் ஏமாற்றத்தை எதிர்கொண்டுள்ளதை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளதன் அடிப்படையிலேயே எமக்கான ஆதரவும் இவ்வாறான மக்கள் திரட்சியும் கட்டியம் கூறி நிற்கின்றன.

இந்த நெடுந்தீவு மக்களுக்கு இலகுவான கப்பல் பயணம் ஒன்றுக்காகவே மக்களாகிய நீங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பல மில்லியன் கணக்கில் செலவிடப்பட்ட வடதாரகை என்ற கப்பலை  உங்களுக்காக வழங்கிவைத்தது மட்டுமன்றி அதன் இலவச சேவையையும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்

ஆனால் நெடுந்தாரகை என்ற கப்பல் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும் அந்தக் கப்பலுக்கு பணம் அறவிடப்படுவது தொடர்பில் எனக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.

ஆனாலும் நிச்சயம் வடதாரகை போன்று நெடுந்தாரகையும் இலவச சேவையாக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அதேபோன்று இப்பகுதியின் வீதிகள் புனரமைப்பு, வான் அகழ்வுப் பணிகள், கடற்றாவரம் ஊடான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்களிலும் நாம் அவதானம் செலுத்தி இந்த பகுதியில்  நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்பதுடன் சட்டவிரோத மணல் அகழ்வையும் தடுத்து நிறுத்த துரிதகதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.ஷ

Related posts: