கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

ஜனநாயகத்தை காப்பாற்றப் போனதாகக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேரள கஞ்சாகாரர்களைத் தவிர்த்து, ஒரு ஜனத்தையாவது தங்களது வாழ்க்கையில் காப்பாற்றியிருக்கின்றார்களா? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற குற்றவாளிகளை ஒப்படைத்தல் கட்டளைச் சட்டம் மற்றும் கடன் இணக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது மக்களின் நலன்களுக்கு பாதுகாப்பாக இல்லாமல், எமது மக்களின் அழிவுகளுக்கு பொறுப்பாக இருக்கிறார்கள்.
எமது மக்களின் தாகம் தீர்க்க கொஞ்சம் குடிநீரைப் பெறலாம் என நினைத்தால், அதற்கும் இவர்களே தடையாக பின்னால் நிற்கிறார்கள்.
எமது மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்து, எமது மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்ட அண்மைய வெள்ளம் பற்றி ஆராய்கின்றபோது, அந்த அழிவின் பின்னணியிலும் இவர்களே நிற்கிறார்கள்.
வாழ்வெட்டு, போதைப் பொருள், சமூகச் சீர்கேடுகள் பற்றிப் பார்க்கின்றபோதும், அவற்றின் பின்னணியிலும் இவர்களே இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எமது மக்களின் அவலங்களை திசை திருப்பி அதில் குளிர்காய்ந்து, அடுத்த தேர்தலில் எமது மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காகவே இவர்கள் இப்போது புதிய அரசியல் யாப்பு நகல் என்றொன்றை வைத்துக் கொண்டு, இந்த நாட்டில் மீண்டுமொரு குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர்.
இவர்கள் கூறுகின்ற புதிய அரசியல் யாப்பு வரைபிலே எமது மக்களுக்கு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை இவர்களால் கூற முடியுமா?.. எனக் கேட்க விரும்புகின்றேன். ஆளும் வர்க்கத்திற்கு சார்பானதாக மாத்திரமே ஏற்படுத்தப்படுகின்ற இத்தகைய யாப்புகளால் எமது மக்கள் எத்தகைய நன்மைகளை அடைவார்கள் என்பது பற்றி உறுதியிட முடியுமா? எனக் கேட்க விரும்புகின்றேன்.
ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகின்றவர்களுக்கு இந்த நாட்டில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்துமாறு கோர இன்னமும் வக்கில்லாமல் இருக்கிறது. ஆளுந்ததரப்பில் இருக்கின்ற உங்களால், இவற்றை எல்லாம் செய்ய முடியாது என்றில்லை. விரும்பமும், ஆற்றலும், அக்கறையும் எமது மக்களின் மீதாக இருக்குமானால், நிச்சயமாக இவற்றினை செய்ய முடியும்.
எமது சமூகத்திலே ‘பதினாறும் பெற்று பெற்று பெரு வாழ்வு வாழ்க” என வாழ்த்துவார்கள். ஆனால், எமது மக்கள் பதினாரையும் பெற்றும் அவல வாழ்க்கையினையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்தையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
Related posts:
|
|